அஜித் கொலை வழக்கில் புகார் தாரர் நிகிதா இன்று நீதிபதி முன்பு ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது..
அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். மதுரை 4-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். 3-ம் நாளான இன்று புகார்தாரர் நிகிதா, அவரின் தாயார் காவல் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது. கோயில் ஊழியர்கள், மருத்துவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் சாட்சியம் அளிக்க நீதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி புகாரளித்த நிகிதா இன்று நீதிபதி முன்பு ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தனிப்படை காவலர்கள் 6 பேர், நிகிதா எந்த உயரதிகாரிக்கு தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது..
நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக 2011-ம் ஆண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியது. உண்மையிலேயே நகை திருட்டுப் போனதா? என்பதும் அவரை விசாரித்தால் தான் தெரியவரும்.. இதனால் நிகிதாவை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இன்று நிகிதாவிடம் நடைபெறும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நிகிதா தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தான் எங்கும் செல்லவில்லை என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார் நிகிதா. மதுரை திருமங்கலத்தில் வசித்து வந்த நிகிதா தற்போது கோவையில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.. எனவே அவர் இன்று நீதிபதி முன்பு ஆஜராவாரா என்பதே சந்தேகமாகவே உள்ளது..