தஞ்சையில் நவம்பர் 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு, நிலம், நீர்,வானம், நெருப்பு, காற்று மாநாடு நடத்தப்படும் என்று சீமான் அறிவித்திருந்தார். தேனியில் ஆடு, மாடு மாநாட்டை நடத்திய அவர், தர்மபுரியில் மலைகளின் மாநாட்டையும் நடத்தினார்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் எங்களின் பண்பாட்டுச் செல்வங்கள். எங்களின் உடன் பிறந்தவர்கள். இவற்றை வளர்த்தல் என்பது ஒரு தொழில் அல்ல. அது எங்களின் வாழ்க்கை முறை. விவசாயத்தின் நீட்சி. பால், கறி எல்லாம் ஆந்திரா, ராஜஸ்தானில் இருந்து வருகிறது. எங்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஒன்று கால்நடைகள். அறுவடைக்கு திருநாள் வைத்த இனம்.
ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடம் இன்றி போய்விட்டது. மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க தடை விதிக்கின்றனர். ஆனால், மலையை வெட்டி எடுக்கின்றனர். ஆடு, மாடுகளுக்கு பேசும் திறன் இன்றி அவற்றுக்காக நான் பேசுகிறேன். அதற்காகத்தான், ஆடு, மாடுகள் மாநாடு நடத்தினார்.
தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில், தஞ்சையில் நவம்பர் 15-ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருவையாறு தொகுதியில் கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



