பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த மிகக் கோரமான ரயில் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். பரூனி-கதிகார் ரயில் பாதையில் உள்ள உமேஷ் நகர் ரயில் நிலையம் அருகே இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த 4 பேரும் காளி பூஜை திருவிழாவைப் பார்த்துவிட்டு, அதிகாலையில் தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கினர்.
சாகேப்பூர் கமல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ரஹுவா கிராமத்தைச் சேர்ந்த இந்த 4 பேரும், காளி பூஜை ஒட்டி நடைபெற்ற உள்ளூர் திருவிழாவை பார்த்த பிறகு, நள்ளிரவைத் தாண்டி ரயில் தண்டவாளத்தின் வழியாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். உமேஷ் நகர் நிலையம் மற்றும் சாகேப்பூர் கமல் ரயில் நிலையம் இடையேயுள்ள பகுதியில் அவர்கள் தண்டவாளத்தில் நடந்து வந்தபோது, பரூனி திசையில் இருந்து அதிவேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் அடங்குவர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. உள்ளூர் தகவல்களின்படி, உயிரிழந்தவர்கள் தர்மதேவ் மஹதோ, அவரது பேத்தி, ரோஷினி குமாரி மற்றும் ரீதா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியது. இதையடுத்து, சாகேப்பூர் கமல் காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறை குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிராம மக்களின் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் நீர் தேங்கியிருந்ததால், அவர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருவிழா கொண்டாட்டச் சூழலில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.



