தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தங்கள் கட்சி அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக, தனது கட்சியின் பொதுக்குழுவை ஜனவரி மாதம் கூட்டி, அதில் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதனால், புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகி மாற்றுத் திசையில் பயணிக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், தற்போது அந்தச் சந்தேகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கூட்டணி குறித்து அவர் பேசுகையில், புரட்சி பாரதம் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் போதை ஒழிப்பு என்பதே தங்களது முதல் நடவடிக்கையாக இருக்கும் என்ற நிபந்தனையுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே, இந்த அறிவிப்பால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஷியில் உள்ளார்.



