தமிழ்நாடு அரசியல் தற்போது மாற்றம் நிறைந்த பருவத்தை சந்தித்து வருகிறது. திமுக ஆட்சியின் வலிமை ஒருபுறம் நிலைத்து நிற்க, மறுபுறம் பாஜக தனது பாதையை வலுப்படுத்த புதிய அரசியல் கணக்குகள் போடுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, பாஜக எடுத்துள்ள அணுகுமுறை வெறும் மனிதாபிமானம் அல்ல, அரசியல் கணக்கு என்பதைக் காட்டுகிறது.
அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பாஜக, தற்போது விஜயுடன் “அமைதியான அரசியல் உறவை” பேணத் தொடங்கியுள்ளது. கரூர் நிகழ்வுக்குப் பிறகு, தமிழிசை, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கரூரில் முகாமிட்டனர். அண்ணாமலை இலங்கை பயணத்தை ரத்து செய்து நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்றார். கரூர் மாவட்ட பாஜக சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோரும் விஜய்க்கு நெருக்கமான அறிகுறிகளை வெளிப்படுத்தினர்.
அதே நேரத்தில், “இந்த கூட்ட நெரிசல் இயல்பானது அல்ல, இதில் உள்நோக்கம் இருக்கலாம்” என பாஜக வட்டாரங்கள் வெளிப்படையாகக் கூறுவது, திமுக அரசை குறிவைத்து விஜய்க்கு மறைமுக ஆதரவாக மாறி உள்ளது. தற்போது பாஜக – விஜய் இடையே தொடர்ச்சியான ஆலோசனைகள் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஜயுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாங்கள் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறோம் என கூறுவதை விட மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்பதே உண்மை. விஜயுடன் கூட்டணி வைக்கலாம், வைக்காமல் கூட போகலாம். ஆனால் நாங்கள் கூட்டாக அரசை எதிர்ப்போம், இது கூட்டணியாகுமா என்பதை வரும் காலங்களில் பார்க்கலாம் என சூசகமாக பதிலளித்துள்ளார்.
Read more: 16,000 பேர் பணி நீக்கம்.. நெஸ்லே நிறுவனம் அறிவிப்பு.. கலக்கத்தில் ஊழியர்கள்..



