ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் இன்று அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முதல் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.. மேலும், ஈரானின் இடைக்கால தலைமைக்குழு எடுத்த முக்கிய முடிவை அவர் அறிவித்தார். அதன்படி, ஈரான் மீது தாக்குதல் அந்த அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து தொடங்காத வரை, அந்த நாடுகளுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் அல்லது வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளாது என்று தெஹ்ரான் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த தகவலை சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த வார இறுதியில் ஈரானில் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையில், இந்த அறிவிப்பு பிராந்திய பதற்றத்தை குறைக்க ஈரான் மேற்கொள்ளும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சனிக்கிழமையும் இதுகுறித்து பேசும்போது, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், ஈரானின் தற்காலிக தலைமைக்குழு தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில், ஈரான் இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்வைக்கும் அழுத்தங்களுக்கு ஈரான் சரணடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“ஈரான் மக்களை சரணடையச் செய்ய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை, அவர்கள் உடன் கல்லறைக்கு போகும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.. இந்த கருத்தை அவர் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையின் போது தெரிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் படிப்படியாக தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மோதலின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் அதிகமாக பாதித்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி என பல இடங்களில் வெடிப்பு சத்தங்கள், ஏவுகணை எச்சரிக்கை அலாரங்கள் மற்றும் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதிகாரப்பூர்வமாக இதை “சிறிய சம்பவம்” என மட்டுமே அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துபாய் அரசு ஊடகம் வெளியிட்ட அறிக்கையில், “பயணிகள், விமான நிலைய பணியாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு Dubai International Airport விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்புக்காக ஒதுங்கியிருந்தபோது பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களின் காரணமாக இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் வளைகுடா நாடுகளின் வான்வழி பகுதிகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஈரான் மேற்கொண்டதாக கூறப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் கத்தார், பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் பிற முக்கிய கட்டமைப்புகளையும் இலக்காகக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More : ஈரான் போர் பதற்றம்.. துபாயில் அதிக தள்ளுபடியில் தங்கம் விற்பனை..! இந்தியாவில் என்ன தாக்கம் ஏற்படும்?



