திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் “ 2026-ல் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.. தனது பொது வாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர்.. இளைஞர்களுக்கு நல்வழிக்காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.
கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக் கொண்டவர் வைகோ.. மதுரையில் இருந்து திருச்சிக்கு நீதி கேட்டு கலைஞர் நடைபயணம் சென்ற போது உடன் பயணித்தவர் தான் வைகோ.. திராவிட இயக்க பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் நானும் வைகோவும்.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதையின் பாதையில் இளைஞர்களை காக்க வேண்டும்.. போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.. அதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்புகளை உணர்ந்து அந்த பழக்கத்தை கைவிட வேண்டும்.. போதைப் பொருள் கடத்தல் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.. மத்திய அரசும் ஒன்றிய அரசும் இணைந்து அதனை கட்டுப்படுத்த வேண்டும்..
கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை பிடித்துள்ளோம்.. இதில் குற்றவாளிகள் மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.. சில வழக்குகளில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்..
போதை பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.. கலைத்துறையை சேர்ந்தவர்கள் பொறுப்புணர்வுடன் படைப்புகளை வழங்க வேண்டும்.. போதை பழக்கத்தை புகழ்வது போன்ற காட்சிகள் ஒரு சமுதாயத்தையே சீரழித்து விடும்.. பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டும்..
நாட்டின் எல்லைகள் வழியாக போதைப் பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.. சாதி மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ள சிலரே பேசுகிறார்கள். கிறிஸ்துமஸ் விழாஇன் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது.. ஊரே ஒற்றுமையாக இருந்த காலம் போய், மத மோதல்களை உருவாக்க சில திட்டமிட்டு வருகின்றனர்.. அன்பு செய்ய சொல்லி தரும் ஆன்மீகத்தை வம்பு வளர்க்க சிலர் பயன்படுத்துகின்றனர்..
மது போதையையும், அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்.. அண்ணான் வைகோவின் இந்த சமத்துவ வெற்றி பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.. அதே நேரத்தில் வைகோவின் இந்த நோக்கம் பெரிது என்றாலும் உங்களின் உடல்நிலை மிகவும் பெரிது. மிகுந்த கவனத்துடன் நீங்கள் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.. இனி இது போன்ற கடுமையான நடைபயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்பதை உரிமை உடன் கோருகிறேன்..” என்று தெரிவித்தார்.



