தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை சீனா வரவேற்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை சீனா நடத்தும்… SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக வரும் பிரதமர் மோடியை சீனா வரவேற்கிறது. அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன், தியான்ஜின் உச்சிமாநாடு ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் சந்திப்பாக இருக்கும் என்றும், SCO அதிக ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, சுறுசுறுப்பு மற்றும் உற்பத்தித்திறனைக் கொண்ட உயர்தர வளர்ச்சியின் புதிய கட்டத்திற்குள் நுழையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 31 அன்று சீனாவுக்குச் செல்வார், இது 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்வது இதுவே முதன்முறையாகும்..
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் ஜூன் மாதம் நடந்த SCO அமைச்சர் கூட்டங்களில் கலந்து கொண்டனர். ஜெய்சங்கர் பெய்ஜிங்கில் ஜி ஜின்பிங்கை சந்தித்து, இந்தியா-சீன உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார். அதே நேரத்தில் இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதில் தொடர்ச்சியான தலைமைத்துவ வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இரண்டு நாள் பயணமாக சீனா செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஜப்பானுக்குச் செல்ல உள்ளார்…
இந்தியா-சீன உறவுகள்: மோதலில் இருந்து நட்பு வரை
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா – சீனா இடையிலான பதற்றம் அதிகரித்தது.. 1962 போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் வன்முறை மோதல் இது தான். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், சீனத் தரப்பில் எத்தனை உயிரிழப்புகள் பதிவானது என்பது தெரியவில்லை..
இந்த மோதல் காரணமாக இரு நாடுகளிடையேயான உறவுகள் விரிசல் அடைந்தது.. 4 ஆண்டுகளுக்கும் மேலாக விரிசல் அடைந்த உறவுகளுக்குப் பிறகு, அக்டோபர் 23, 2024 அன்று, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கசானில் நடந்த 16வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சந்தித்துக் கொண்டனர்.. அப்போது ராஜதந்திர அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
சந்திப்பின் போது, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் முழுமையான விலகலுக்கான ஒப்பந்தத்தையும், 2020 மோதலில் இருந்து எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். வேறுபாடுகளை ஆக்கப்பூர்வமாக நிர்வகிப்பதும், எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் செயல்களைத் தவிர்ப்பதும் மிக முக்கியமான தேவை என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : செப். 30-க்குப் பிறகு ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்காதா? மத்திய அரசு சொன்ன பதில் இதுதான்!