“நோயாளி உடன் தான் ஆம்புலன்ஸில் சென்றோம்..” இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுப்பு..

EPS ambulance new

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எம்.ஜி.ஆர் சிலை அருகே நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.. அப்போது அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அப்போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் சென்றதால் எடப்பாடி பழனிசாமி கோபம் அடைந்தார்.. அப்போது பேசிய அவர் “ நோயாளியே இல்லை என்றும் என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸை அனுப்பி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை கேடுகெட்ட கேவலமான அரசு செய்கிறது..


நானும் பல இடத்தில் பார்த்துவிட்டேன். நேருக்கு நேர் எதிர்க்க தில்லு, தெம்பு, திராணி இல்லாதவர்கள் இப்படி கேவலமான செயலில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆம்புலன்ஸ் எண்ணையும் ஓட்டுனரின் பெயரையும் குறித்து வைத்துகொண்டு காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்” என கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் சத்தம் போட்டார்.

மேலும் அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டி வரும் ஓட்டுனரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார் என எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் இருந்து என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்கள்.. அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பெண் நோயாளி ஒருவரை ஏற்றவே சென்றோம்.. அப்போது பொதுமக்கள் எதிரே வந்தனர்.. தற்போது தான் எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார்.. அதனால் இந்த வழியில் போக முடியாது என்று தெரிவித்த காரணத்தினால் நான் மற்றொரு வழியில் சென்றேன்.. அப்போது அங்கிருந்த காவல்துறையினர், இந்த வழியாகவே செல்லலாம் என்று தெரிவித்தனர்..

அதனால் தான் எடப்பாடி பேசிக்கொண்டிருந்த இடம் வழியாக வந்தேன்.. மற்ற எந்த காரணத்திற்காகவும் நான் அந்த வழியில் செல்லவில்லை.. நோயாளி உடன் தான் ஆம்புலன்ஸில் சென்றேன்.. எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்திய இடத்தின் பின்புறம் இருந்து 50 மீட்டர் தொலைவில் தான் மருத்துவமனை இருந்தது.. நாங்கள் வேறு வழியிலும் செல்ல முடியாது.. நாங்கள் என்ன தான் செய்வது.. மக்களின் உயிரை காப்பாற்றும் எங்களுக்கு இது வருத்தமளிக்கிறது..” என்று தெரிவித்தார்…

முன்னதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கண்டம் தெரிவித்திருந்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அவர் செல்லும் இடமெல்லாம் ஆம்புலன்ஸ் வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். கிராம பகுதியாக இருந்தாலும், மலைப்பகுதியாக இருந்தாலும், நகரப்பகுதியாக இருந்தாலும் விபத்து நடந்த சில நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிர்களை காக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் சேவை உலகில் எங்கும் கிடையாது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை கூட்டி விட்டு, நான் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வருவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஒரு பழமொழி சொல்வார்களே அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று.. அதுபோல தான் இதுவும்.. முன்னாள் முதல்வர் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுக்கும் தோணியில் பெயரை நோட் பண்ணு.. வண்டி எண்ணை நோட் பண்ணு என்பது அநாகரிகமான செயல். இந்த அநாகரிகமான செயலை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்..” என்று எச்சரித்திருந்தார்..

Read More : ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு EPS மிரட்டல் விடுத்த விவகாரம்.. அமைச்சர் மா.சு ஆவேச பதில்..!

RUPA

Next Post

"எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.." டி.ஆர். பாலு மனைவி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

Tue Aug 19 , 2025
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி இன்று காலமானார்.. இவருக்கு வயது 80. நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் […]
Stalin cm

You May Like