மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காஸ்பா பகுதியில் பெண் ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா வாய்ப்பு என்ற பெயரில் ஒரு மாடல் பெண்ணுக்கு (வயது 24) இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சோசியல் மீடியா மூலம் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவருடன் பழகிய 2 பேர், ‘நாங்கள் பாலிவுட், கொல்கத்தா திரையுலக தயாரிப்பாளர்கள்’ எனக்கூறி அறிமுகமாகியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். மேலும், அவரிடம் இருந்து பணத்தையும் பெற்றுள்ளனர். மேலும், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு காவல்துறையில் புகாரளித்தார். அந்த பெண், “திரைப்பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை நம்ப வைத்து வன்கொடுமை செய்ததாகவும், என்னை திரையுலக பிரபலங்களிடம் சந்திக்க வைப்பதாக கூறினர். பின்னர், பின்னர் என்னை ஒதுக்க ஆரம்பித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்கள் யார் என்பதை விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.