தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ், விசிக கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.. எனினும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் வெளிப்படையாகவே திமுக கூட்டணியை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே சலசலப்பு நீடித்து வருகிறது.. இந்த சூழலில் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இது காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும் தங்களுக்கும் தெரியும் என்று கூறினார்.
இந்த நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆட்சியில் பங்கு குறித்து விசிக அழுத்தம் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.. அந்த நோக்கத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை வைப்பது இயல்பானது தான்.. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையும் ஒன்று..
இது அதிகார பரவலாக்கத்தை வலியுறுத்தும் ஒரு கோரிக்கை.. 1999-ம் ஆண்டிலிருந்தே இதை நாங்கள் பேசி வருகிறோம்.. 2016வாக்கில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற கருத்தரங்கத்தை அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து நடத்தி இருக்கிறோம்.. ஆனால் இதனை சாத்தியப்படுத்தும் சூழல் தமிழகத்தில் இன்னும் கனியவில்லை என்பதை நாங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.
அதுவும் இந்த தேர்தலில் வலதுசாரிகளின் கைகள் ஓங்கிவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. அதாவது இப்படிப்பட்ட கோரிக்கைகளை எழுப்புவதன் மூலம், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு, பலவீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது, அதன் மூலம் வலதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எனவே இந்த தருணத்தில் ஆட்சியில் பங்கு கோரிக்கைக்கு விசிக அழுத்தம் கொடுக்கவில்லை.. ஆனால் கைவிடவும் இல்லை.. காங்கிரஸ் இந்த கோரிக்கையை வைக்க அந்த கட்சிக்கு உரிமை உள்ளது.. அது கூட்டணிக்குள் பேசி தீர்க்கப்படும்.. ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என்று முதல்வர் கூறியிருக்கிறார்..
காங்கிரஸ் அந்த கோரிக்கையை எழுப்பக் கூடாது என்பதில்லை.. அப்படி எழுப்பினால் அந்த கூட்டணி சிதறிவிடும் என்று பலரும் நம்புகிறார்கள்.. ஆனால் காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கும் என்று நான் நம்புகிறேன்.. பேச்சுவார்த்தையில் அதனை சுமூகமாக தீர்ப்பார்கள்.. முதலமைச்சரும் – காங்கிரஸ் கட்சியினரும் பேசி தீர்வு காண்பார்களாம்..” என்று தெரிவித்தார்..



