சென்னை மாநகரில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக “தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025” என்ற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் இனி மிகக்கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன. சாலைகளில் தூசிகளையும் மணலையும் சிதறவிட்டபடி செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளை தடுக்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் மேல்பகுதி மற்றும் நான்கு பக்கவாட்டுகளும் தார்பாலின் கொண்டு முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும். தூசிகள் வெளியேறாத வண்ணம் பாதுகாப்பாகப் பொருட்கள் கொண்டு செல்லப்படாவிட்டாலோ, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் சுமை ஏற்றப்பட்டிருந்தாலோ அந்த வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.
அதுமட்டுமின்றி, விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அந்த இடத்திலேயே ரூ.25,000 அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுமையாக செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்.
சென்னையைத் தூய்மையாகவும், மாசு இல்லா நகரமாகவும் மாற்ற மாநகராட்சி எடுத்து வரும் இத்தகைய நடவடிக்கைகளுக்குக் கட்டுமான நிறுவனங்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. விதிகளை மதிக்காமல் அலட்சியமாக செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



