இந்தியாவில் குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த சூழலில் தான், நாமக்கல் மாவட்டத்தில் 19 வயது கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லிமலை அருகே வழவந்தி நாடு என்ற பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டேஷனில் மோகன் குமார் (வயது 55) என்பவர் எஸ்.எஸ்.ஐ. ஆக, அதாவது சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மோகன் குமார் 19 வயதாகும் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இவர் பணியுரியும் காவல்நிலையத்தில் சமையலராக இருக்கும் ஒருவரின் மகளைத் தான் மோகன்குமார் பலாத்காரம் செய்துள்ளார். அந்த மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 6ஆம் தேதி மோகன் குமார் பணி நிமித்தம் காரணமாக ராசிபுரம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது, அந்த மாணவியை ராசிபுரம் வரை காரில் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியும், அவரது தந்தையும் மோகன்குமாரின் காரில் ஏறியுள்ளனர். பின்னர், கொல்லிமலை அடிவார முள்ளுக்குறிச்சி பகுதியில் மாணவி மட்டும் மோகன்குமாருடன் பயணித்துள்ளார்.
அப்போது, மாணவிக்கு மோகன்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அவரை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை வெளியில் சொன்னால் நடப்பதே வேறு என்று மிரட்டியும் உள்ளார். ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் மாணவி தெரிவித்த நிலையில், அவர்கள் நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையடுத்து, மோகன்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : “ஆசையாக பேசி ஆசை தீர உல்லாசமாக இருந்த காதலன்”..!! இளம்பெண் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!