மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 23 வயது இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருநங்கையிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பழகி வந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, “அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் மட்டுமே திருமணம் செய்து கொள்வதாக” அந்த இளைஞர் கூறியுள்ளார். இந்த திருமண ஆசையை நம்பிய திருநங்கை, டெல்லி சென்று பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சைகளையும் எடுத்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில், திருமண ஆசை காட்டி அந்த இளைஞர் திருநங்கையிடம் பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, திருநங்கை தனது காதலனான அந்த இளைஞருக்கு கார் உள்ளிட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெண்ணாக மாறுவதற்கு சிகிச்சைகள் எடுத்து வந்த திருநங்கை, தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். அப்போது, அந்த இளைஞர் திடீரென்று திருமணம் செய்து கொள்வதற்கு மறுத்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திருநங்கை, உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த திருமண மோசடி சம்பவம் இந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



