அழகாய் இருக்கிறாய் தொப்பை பயமாய் இருக்கிறது என்று யாராவதுசொல்லிவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் ஒருபுறம். பெண்கள் முன்னிலையில் தொந்தியும் தொப்பையுமாய் நன்றாகவா இருக்கிறது என்று கவலைகொள்ளும் ஆண்கள் ஒருபுறம்.
எவ்வளவு ஸ்லிம்மாக இருந்தேன். திருமணத்துக்குப் பிறகுதான் இப்படி பெருத்து விட்டேன் என்று கவலைப் படும் பெண்கள் ஒருபுறம். ஓடி ஓடி வேலை செய்தாலும் உடம்பு குறையாமல் எடை அதிகமாகிவிட்டதே என்று சலித்துகொள்ளும் நடுத்தரவயது பெண்களும், ஆண்களும் அதிகமாகி வருகிறார்கள். என்ன செய்தால் தொப்பையை இல்லாமல் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பொதுவாக தலை முதல் பாதம் வரை எல்லாமே குண்டு குண்டாய் பருத்திருப்பதுதான் உடல் பருமன் என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உடலில் வயிறு, இடுப்பு, பிட்டம் போன்ற பகுதிகள் மட்டு பெருத்து உடலின் தோற்றம் பார்க்க மெல்லியதாக இருந்தாலும் அதுவும் உடல் பருமனுக்கான அறிகுறியே என்று சொல்லலாம்.
உடலை கனக்கச்சிதமாக வைத்திருக்கும் பெண்களுக்கு கூட வயிறு தொப்பை விழுவதைத் தடுக்க முடிய வில்லை என்ற கவலை இருக்கும். முன்பெல்லாம் பெண்கள் துணி துவைக்கும் போது குனிந்து நிமிர்ந்து துணி அலசினார்கள். வீட்டைப் பெருக்கி துடைத்தார்கள். இப்போது எல்லாமே நின்றபடி செய்வதால் வயிறு இயல் பாகவே பெருத்து விடுகிறது என்பதையும் ஒப்புகொள்ள வேண்டும்.
எந்தவொரு உடற்பயிற்சி சாதனங்களும் இல்லாமல், எங்கு வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு சிறந்த பயிற்சி வேகமான நடை. தினமும் அரை மணி நேரமாவது வேகமான நடை பழக. உடம்பில் இருக்கும் கொழுப்பை, குறிப்பாக தொப்பை கொழுப்பை கரைக்க உதவும். வேகமான நடை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் உதவும். வேகமான நடை வளர்சிதை மாற்றத்தை தூண்டி கலோரிகளை எரிக்க உதவும்.
தொப்பையை குறைக்க எளிய வீட்டு வேலைகள் மற்றும் பயிற்சிகளை செய்யலாம். சிறிய அளவில் காய்கறி தோட்டம் அமைப்பது, சூடான தண்ணீர் குடிப்பது, மாவு சத்துள்ள உணவுகளை குறைத்து புரத சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, வீட்டைப் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்துவது, வீட்டு வேலைகளை செய்வது, துணி துவைப்பது போன்றவற்றிற்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். இது நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதுடன், உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும்.
பிள்ளைகளுடன் விளையாடும்பொழுது நடப்பது, ஓடுவது போன்ற செயல்கள் உடலை இயங்க வைக்க உதவும். இதனால் தொப்பையை குறைக்க முடியும். குழந்தைகளுடன் நடை பயிற்சி செய்வது, ஓடுவது, பந்து விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற விளையாட்டுகள் சிறந்த உடற்பயிற்சியாகி தொப்பையை குறைக்க உதவும். பிள்ளைகளுடன் விளையாடுவதன் மூலம் மன அழுத்தம் குறைவதுடன், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே ஒரு நல்ல உறவும் கிடைக்கிறது.
படிக்கட்டுகளில் ஏறுவது, இறங்குவது தட்டையான இடத்தில் நடப்பதை விட மூன்று மடங்கு வேகமாக கலோரிகளை எரிக்க உதவும். கால்கள், தொடை, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தசைகளை வலுவடையச் செய்யும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சோர்வை குறைக்கும். இதயத்தை வலுவடையச் செய்யும். படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது தொப்பையை குறைக்க சிறந்த ஒரு வகையான கார்டியோ பயிற்சியாகும். கொழுப்பை கரைத்து, தசைகளை வலுப்படுத்தி, கலோரிகளை எரிக்க உதவும்.
தோட்டவேலை செய்பவர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களை விட ஆரோக்கியமாக இருக்கலாம். தோட்டவேலை செய்யும் பொழுது சூரிய ஒளி உடம்பில் படுவதால் விட்டமின் D கிடைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தோட்டத்தில் களை எடுப்பது, நீர் விடுவது, மண்ணைக் கிளறி தோண்டுவது போன்றவை குனிந்து நிமிரும் இயக்கங்கள். இந்த செயல்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும்.
சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டுவது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதுடன். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது உடலின் அனைத்து பகுதிகளையும் பயிற்சி செய்ய உதவுவதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். வியர்வை சிந்த ஓடுவதும், வேகமான நடையும் கூட தொப்பை கொழுப்பை குறைக்கும் சிறந்த கார்டியோ பயிற்சியாகும்.
நீச்சல் என்பது ஒரு முழு உடற்பயிற்சியாகும். இது தசைகளை வலுப்படுத்தி, தொப்பை கொழுப்பை குறைத்து ஃபிட்டாக வைத்துக்கொள்ள உதவும். நீச்சல் பயிற்சி செய்வதால் கலோரி எரிப்பு, தசைகளை வலுவூட்டுதல், இதயத் துடிப்பை அதிகரித்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் போன்ற பலன்கள் ஏற்படும். வாரத்திற்கு மூன்று முறை 30 முதல் 45 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.
யோகா என்பது உடல் செயல்பாடு, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் ஆகிய அனைத்தும் கலந்த சிறந்த உடற்பயிற்சியாகும். இது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மன அழுத்தத்தை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, தசைகளை வலுப்பெறச் செய்யும். படகு போஸ், கோப்ரா போஸ் போன்றவற்றை தினமும் செய்து வர தொப்பை கொழுப்பை எளிதாகக் குறைக்கலாம்.