நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்கள் நாளை, செப்.22 முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசுகையில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 4 அடுக்குகளில் இருந்து (5%, 12%, 18% மற்றும் 28%) இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் ‘sin goods’ எனப்படும் ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விலை குறையும் பொருட்கள் :
உணவுப் பொருட்கள்: பால் சார்ந்த பானங்கள், காபி, பிஸ்கட்டுகள், வெண்ணெய், தானியங்கள், சோளப் பொறிகள், 20 லிட்டர் குடிநீர் கேன்கள், உலர் பழங்கள், பழச்சாறுகள், நெய், ஐஸ்கிரீம், ஜாம், கெட்ச்அப், பனீர், பேக்கரி பொருட்கள், இறைச்சி வகைகள், இளநீர் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
அன்றாடப் பொருட்கள்: ஆஃப்டர் ஷேவ் லோஷன், ஃபேஸ் கிரீம், முக பவுடர், தலை முடி எண்ணெய், ஷாம்பூ, ஷேவிங் கிரீம், டால்கம் பவுடர், டூத் பிரஷ், சோப்பு போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்களும் விலை குறைப்புப் பட்டியலில் உள்ளன.
மின்னணு சாதனங்கள்: ஏ.சி, டிஷ்வாஷர், தொலைக்காட்சி (TV) மற்றும் வாஷிங் மெஷின் போன்ற மின்னணு பொருட்களின் விலையும் குறையக்கூடும்.
மருத்துவப் பொருட்கள்: மருத்துவ உபகரணங்களான நோயறிதல் கருவிகள் குளுக்கோமீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. இந்த வரி குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என மருந்தகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சேவைகள்: சலூன், ஜிம், அழகு நிலையங்கள், யோகா பயிற்சி மையங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சேவைகளின் கட்டணங்களும் குறையக்கூடும்.
வீடுகள்: சிமெண்டிற்கான ஜிஎஸ்டி வரி 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது வீடுகளின் விலையை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனங்கள்: மிகப்பெரிய வரி குறைப்பு வாகனத் துறையில் ஏற்பட்டுள்ளது. வாகனங்களுக்கான வரி, செஸ் வரியுடன் சேர்த்து 35%-50% ஆக இருந்த நிலையில், அது இப்போது 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
டவ் ஷாம்பூ: 340 மில்லி டவ் ஷாம்பூ பாட்டில், முன்பு ரூ.490-க்கு விற்கப்பட்டது. இனி, இதன் புதிய விலை ரூ.435 ஆகும்.
லைஃப்பாய் சோப்பு: 75 கிராம் எடை கொண்ட 4 லைஃப்பாய் சோப்புகள் கொண்ட பேக்கின் விலை ரூ.68-ல் இருந்து ரூ.60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஹார்லிக்ஸ்: 200 கிராம் ஹார்லிக்ஸ் ஜாடியின் விலை ரூ.130-ல் இருந்து ரூ.110 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் ரூ.20 விலை குறைப்பு கிடைக்கிறது.
கிசான் ஜாம்: 200 கிராம் கிசான் ஜாமின் விலை ரூ.90-ல் இருந்து ரூ.80 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கார் விலைகள் குறைப்பு :
மாருதி சுசுகி ஆல்டோ K10: ரூ.1,07,600 வரை விலை குறைந்துள்ளது. புதிய ஆரம்ப விலை ரூ.3,69,900.
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ: ரூ.1,29,600 வரை விலை குறைந்து, ரூ.3,49,900 ஆரம்ப விலையில் கிடைக்கும்.
மாருதி சுசுகி செலிரியோ: ரூ.94,100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.4,69,900.
மாருதி சுசுகி வேகன்ஆர்: ரூ.79,600 வரை குறைந்து, ரூ.4,98,900 ஆரம்ப விலையில் கிடைக்கும்.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட்: ரூ.84,600 வரை விலை குறைந்து, ரூ.5,78,900 ஆரம்ப விலையில் கிடைக்கும்.
மாருதி சுசுகி பலேனோ: ரூ.86,100 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.5,98,900.
மாருதி சுசுகி இக்னிஸ்: ரூ.71,300 வரை குறைந்து, ரூ.5,35,100 ஆரம்ப விலையில் கிடைக்கும்.
டாடா டியாகோ: ரூ.75,000 வரை விலை குறைந்துள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ்: ரூ.1,10,000 வரை பெரிய விலை குறைப்பைப் பெற்று, ரூ.6,30,390 ஆரம்ப விலையில் கிடைக்கும்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: ரூ.73,800 வரை குறைந்து, ரூ.5,47,278 ஆரம்ப விலையில் கிடைக்கும்.
ஹூண்டாய் ஐ20: ரூ.86,796 வரை விலை குறைக்கப்பட்டு, ரூ.6,86,865 ஆரம்ப விலையில் கிடைக்கும்.
விலை உயரும் பொருட்கள் :
பானங்கள்: கோகோ கோலா, பெப்சி போன்ற கார்பனேட்டட் பானங்கள் மற்றும் பிற ஆல்கஹால் அல்லாத பானங்களுக்கான ஜிஎஸ்டி 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்கள்: 1,200 சிசிக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 1,500 சிசிக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், அத்துடன் 4,000 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட நீளம் கொண்ட வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆடம்பர மற்றும் புகையிலை பொருட்கள்: 350 சிசிக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சொகுசுக் கப்பல்கள், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான விமானங்கள், மற்றும் பீடி, சிகரெட், பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.