சமீபகாலமாக, இளம் வயதினரிடையே மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. எங்கும், எந்த நேரத்திலும் வரக்கூடிய இதய செயலிழப்புக்கு, நமது வீட்டிலேயே இருக்கும் ஓர் அறை முக்கிய காரணமாக இருக்கலாம் என இருதய நோய் நிபுணர் டாக்டர் டிமிட்ரி யாரானோவ் எச்சரித்துள்ளார்.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குளியலறையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மலச்சிக்கல் என டாக்டர் யாரானோவ் தெரிவித்துள்ளார்.
மலம் கழிக்கும்போது ஏற்படும் அதிகப்படியான இறுக்கம், “வால்சல்வா சூழ்ச்சி” (Valsalva maneuver) என்ற நிலையை தூண்டுகிறது. இந்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மார்பில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் விளைவாக, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டு, மயக்கம் அல்லது மாரடைப்பு ஏற்படலாம்.
யாருக்கு அதிக ஆபத்து..?
ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் உட்கொள்பவர்கள் மற்றும் இதய செயலிழப்பு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.
மலச்சிக்கலைத் தடுக்க எளிய வழிகள் :
நார்ச்சத்து நிறைந்த உணவு : பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பீன்ஸ் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து : போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை அருந்தி, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.
உடற்பயிற்சி : தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வது, செரிமானத்திற்கும், கழிவுகள் வெளியேறுவதற்கும் உதவும். மலச்சிக்கல் தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம்.