”தமிழக அரசியலில் 1967, 1977ல் நடந்த தேர்தல்கள் மாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது” என தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். அப்படி அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழக அரசியல் வரலாற்றில் 1967 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகள் மறக்க முடியாத திருப்புமுனைகள். வெறும் ஆட்சிப் பெயர்வுகளாக அல்ல, மக்கள் மனச்சாட்சியின் வெளிப்பாடுகளாகவும், அடிப்படை அடையாள அரசியலின் எழுச்சியாகவும் இவை பார்க்கப்படுகின்றன.
1967ல் நடந்தது என்ன..?1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்த தேசிய காங்கிரசை முதன்முறையாக வீழ்த்திய தேர்தல் தான் 1967. தி.மு.க தலைவர் சி.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற தேர்தலில், தமிழ் மக்கள் எழுச்சியுடன் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், தமிழ் அடையாள உணர்வின் எழுச்சி, படிப்பு திட்டங்கள், பஞ்சம் போன்ற சமூக அதிருப்திகள் இத்தேர்தலைக் கவிழ்த்துவிட்டன. 174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றி பெற்று, அண்ணாதுரை முதல்வராக பதவியேற்றார். 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. முதல் முறையாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைத்த வரலாற்றைக் கட்டி எழுப்பியது திமுக. அதன்பிறகு காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்றளவும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.
1977ல் நடந்தது என்ன..? 1972ல் திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால், எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) உருவாக்கினார். 1977 தேர்தலில், ஊழல் எதிர்ப்பு வாதங்கள், எம்.ஜி.ஆர்-ன் திரை பிரபலம், மக்கள் மனதில் இருந்த நம்பிக்கையுடன் அதிமுக அமோக வெற்றிபெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இவ்வெற்றி மூலம், ஒரு புதிய கட்சி – புதிய தலைமை – புதிய அறிமுகம் என்ற அரசியல் கலாசாரம் உருவானது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியேற்றபோது, மக்கள் முதன்முறையாக ஒரு நடிகரை முழுமையாக அரசியலில் ஏற்றனர். மக்கள் விருப்பம், மாற்றத்துக்கான எதிர்பார்ப்பு, ஆளும் கட்சியின் செயல்பாடுகள் என்பவை தேர்தல்களில் சக்திவாய்ந்த காரணிகளாக இயங்குகின்றன. 1967ல் காங்கிரசும், 1977ல் திமுகவுமே அதற்கான எடுத்துக்காட்டுகள்.
Read more: கொலஸ்டரால் முதல் தமனி வீக்கம் வரை.. சர்க்கரை ஒரு சைலண்ட கில்லர்.. இதய நோய் நிபுணர் வார்னிங்..