90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சீதா. வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரை சீரியல்கள், வெப் சீரிஸ் என காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொண்ட சீதா, தற்போது தனது சமீபத்திய தோற்றத்தால் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளார்.
சீதா தனது திரைப்பயணத்தை 1985-ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ‘ஆண் பாவம்’ திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, மோகனுடன் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’, ரஜினியுடன் ‘குரு சிஷ்யன்’, கமலுடன் ‘உன்னால் முடியும் தம்பி’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 1989-ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த ‘புதிய பாதை’ திரைப்படத்தில் நடித்துப் பிரபலமானார்.
2000-களுக்கு பிறகு சிம்புவின் ‘காதல் அழிவதில்லை’, விஜய்யின் ‘மதுர’ போன்ற படங்களில் தாய் கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். கடைசியாக, ரவி மோகன் நடிப்பில் வெளியான ‘பிரதர்’ மற்றும் ‘அக்கேனம்’ படங்களில் நடித்திருந்ததுடன், மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியான ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்’ வெப் சீரிஸிலும் நடித்து ‘பான் இந்தியா’ நடிகையாகத் தன்னை நிரூபித்தார்.
இதற்கிடையே, நடிகை சீதா கடந்த 1990ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபனை திருமணம் செய்துகொண்டார். ஆனால், 2001-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். பின்னர் 2010-ஆம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட சீதா, 2016-ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது தனியாக வசித்து வருகிறார்.
இந்த சூழலில், நடிகை சீதா தனது தலையை மொட்டை அடித்து, ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘சீதா ப்ரீஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் அவர், மொட்டை அடித்த தோற்றத்திலேயே தனது புதிய வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார். இது அவரது நீண்ட நாள் வேண்டுதலாக இருந்திருக்கலாம் என அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : இரவு நேரத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா..? அப்படினா ரத்தக் குழாய் அடைப்பு தான்..!! உயிருக்கே ஆபத்து..!!