தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், இந்துக்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த மாதத்தில் அசைவம் உண்பது, புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பதும் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது.
ஜோதிடத்தின்படி, புரட்டாசி மாதம் ஆறாவது ராசியான கன்னி ராசிக்குரிய மாதமாகும். இதன் அதிபதி புதன். புதனுக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. புதன் ஒரு சைவ தேவதை என்பதால், புரட்டாசி மாதம் முழுவதும் சைவ உணவுகளை மட்டுமே உண்டு பெருமாளை வழிபட வேண்டும்.
விஞ்ஞானக் காரணம் :
புரட்டாசி மாதம் பருவமழை தொடங்கும் காலமாக இருப்பதால், அதுவரையில் சூடாகி இருந்த பூமி, மழையால் குளிர்ச்சியடையும்போது அதனுள் இருந்த வெப்பத்தை வெளியேற்றும். இந்த நேரத்தில் அசைவ உணவுகளை சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தான், நம் முன்னோர்கள் இந்த மாதத்தில் அசைவ உணவை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
துளசி தீர்த்தம் :
புரட்டாசி மாதத்தில் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தடுக்க, பெருமாள் கோயில்களில் வழங்கப்படும் துளசி தீர்த்தம் மிகவும் உதவியாக இருக்கும். துளசிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. இந்த மாதத்தில் ஏற்படும் காலரா, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைக் காக்க, துளசி கலந்த நீர் அருந்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மருத்துவ காரணங்களுக்காகவே புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்வதை ஒரு பழக்கமாக நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். முறையாக இந்த நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தையும், ஆன்மீக நன்மைகளையும் ஒரே நேரத்தில் பெறலாம்.
Read More : ராகு – கேதுவை கையில் ஏந்தியபடி காட்சி தரும் அரிய சிவ பெருமான்.. எந்த கோவிலில் இருக்கிறார் தெரியுமா..?