நடைபயிற்சி என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் எளிய, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான பயிற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், ‘தினமும் வாக்கிங் சென்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே’ என்று நினைப்பவர்களுக்கு, தற்போது உலக அளவில் பிரபலமாகி வரும் 5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது. இந்தக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நுட்பம், உங்கள் நடைபயிற்சிக்குத் தீவிரத்தையும், கட்டமைப்பையும், பன்முகத்தன்மையையும் கூட்டி, கலோரிகளை மிக வேகமாக எரித்து எடை இழப்பைத் துரிதப்படுத்தும் சக்தி வாய்ந்த பயிற்சியாகச் செயல்படுகிறது.
பிரமிட் முறை என்றால் என்ன..?
5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை என்பது, வேகத்தை மாற்றி மாற்றிச் செயல்படுத்துவதன் மூலம் கலோரிகளை அதிகளவில் எரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நுட்பமாகும்.
இது, 5 நிமிடங்களுக்கு மிக வேகமாக நடப்பதில் தொடங்கி, அதன் பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் நடைபயிற்சியின் வேகத்தைக் குறைத்து, இறுதியில் மிக மெதுவாக நடப்பதில் முடிகிறது. இந்த ஒட்டுமொத்தப் பயிற்சி சுழற்சியும் வெறும் 15 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது.
நேரம் மற்றும் நடைபயிற்சி வேகம் :
5 நிமிடங்கள் – வேகமாக நடப்பது
4 நிமிடங்கள் – வேகத்தை குறைத்து சீராக நடப்பது
3 நிமிடங்கள் – மேலும் வேகத்தைக் குறைத்து மிதமாக நடப்பது
2 நிமிடங்கள் – மிகவும் மெதுவாக நடப்பது
1 நிமிடம் – மிக குறைவான வேகத்தில் நடப்பது
இந்த பிரமிட் முறையில் வாக்கிங் செல்லும்போது, வேகமாக நடப்பதில் இருந்து மெதுவாக நடப்பதற்கு மாறி மாறிச் செல்வதால், அது சாதாரண நடைப்பயணத்தை விட அதிக கலோரிகளை எரிக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. வேகமாக நடக்கும்போதும், குறைவான வேகங்களுக்கும் இடையில் மாறுவதாலும், இதயத்துடிப்பு மற்றும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். மேலும், இது உடற்பயிற்சிக்குப் பிறகும் உங்கள் உடலில் அதிக கொழுப்பு எரிக்கவும் உதவுகிறது.
இதுபோன்ற வேக மாறுபாடுகள் தசைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இந்த முறைப்படி நடைபயிற்சி செய்வது சலிப்பைத் தராமல் சுவாரசியத்தை அளிப்பதால், தொடர்ந்து பயிற்சி செய்யும் ஊக்கம் கிடைக்கிறது. வேகமான மற்றும் மிதமான வேகங்களில் நடப்பதால், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடும் மேம்படுகிறது.
அதிகபட்ச கலோரிகளை எரிக்க விரும்புபவர்கள், இந்த 15 நிமிடப் பிரமிட் நடைபயிற்சியை ஒரு நாளைக்கு 1 முதல் 3 முறை மீண்டும் செய்யலாம். இந்தப் பயிற்சியைத் தொடங்கும் முன் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதுடன், நடைபயிற்சிக்கு ஏற்ற காலணிகள் மற்றும் உடைகளை அணிவதும் அவசியம். இந்த 5-4-3-2-1 நடைபயிற்சி முறையானது, எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி என்று உடற்பயிற்சி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : இது லிஸ்ட்லயே இல்லையே..!! தவெகவில் இணையும் 2 திமுக அமைச்சர்கள்..!! பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!



