பல நேரங்களில் நாம் ஜங்க் உணவை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் கூட நம்மால் அதை தவிர்க்க முடிவதில்லை. சில காரணங்களால் இந்த க்ரேவிங் நமக்கு ஏற்படுகிறது. அது ஏன் என இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாம் தெரிந்தே எடுத்துக் கொள்ளும் நஞ்சு எது தெரியுமா? ஃபாஸ்ட் புட் அல்லது ஜங்க் புட் என்று சொல்லக் கூடிய துரித உணவுகள் தான். இதயநோய், ஹார்ட் அட்டாக், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை உருவாகுவதற்குத் துரித உணவுகள் தான் காரணம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தீமை என்று தெரிந்திருந்தும் அதைச் சாப்பிடத் தூண்டுவது எது? எதனால், அதை மீண்டும், மீண்டும் உட்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிறோம் என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சுவையாக இருக்காது என்று நம்மில் பலர் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளோம். குறிப்பாக, காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால், உண்மை என்ன என்றால், எந்த ஒரு உணவின் சுவையும் நம் நாவினில் ஒட்டுவதற்கு 10, 12 முறை கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். அந்த வகையில், துரித உணவுகளின் சுவை உங்களுக்கு ஒட்டிக் கொண்டது என்றாலும், ஆரோக்கியமான உணவுகளை சுவைப்பதற்கு நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமக்கு மன அழுத்தம் மிகுதியாக இருக்கிறபோது, கார்டிஸால் என்னும் ஹார்மோன் நம் உடலில் சுரக்கிறது. ஆரோக்கியமற்ற துரித உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை இது நமக்குள் தூண்டி விடுகிறது. இதன் விளைவாக ஐஸ்க்ரீம், பீட்சா போன்றவற்றைச் சாப்பிடுகிறோம். இன்றைய அவசர உலகில், பொறுமையாகச் சாப்பிட நேரமில்லை என்பது உண்மை தான் என்றாலும், உணவை சுவைத்து சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், 5 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்ற நமக்குத் துரித உணவுகள் நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன.
கர்ப்ப காலம் மற்றும் மாதவிலக்கு போன்ற காலங்களில் ஏற்படக் கூடிய ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் துரித உணவுகளை மனம் தேடுகிறது. இச்சமயத்தில் ஏற்படும் சோம்பேறித்தனமும் நாம் துரித உணவு சாப்பிடக் காரணமாகிறது. நம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்க வேண்டும் என்றால் அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். புரதம் மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவை இரண்டும் போதுமான அளவில் இல்லை என்றால் துரித உணவுகளைத் தேட தொடங்குகிறோம். அலுவலக நண்பர்கள் அல்லது குடும்ப உறவுகள் மொத்தமாக ஓரிடத்தில் கூடும்போது, யாரோ ஒருவர் துரித உணவை ஆர்டர் செய்யப்போக, ஒட்டுமொத்தமாக மற்ற அனைவரும் அதே உணவை ஆர்டர் செய்து விடுகிறோம்.