2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பரவல் உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தியது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் புதிதாக 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.. கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 35,199 ஆக உள்ளது, தினசரி நேர்மறை விகிதம் 6.91 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 3,481 பேர் குணமடைந்துள்ளனர், மொத்த மீட்பு எண்ணிக்கை 4.41 கோடியாக உள்ளது. இதனால் 4-வது அலை ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது..

இந்த சூழலில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு என்ன காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் விளக்கம் அளித்துள்ளது.. அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நம் நாட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் தளர்வு, குறைந்த பரிசோதனை விகிதம் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் புதிய மாறுபாட்டின் தோற்றம் ஆகியவை தற்போது கொரோனா பரவல் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்.. ” என்று தெரிவித்துள்ளது..
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து மக்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.. கொரோனா நிலைமையை அளவில் (மாவட்டம் மற்றும் துணை மாவட்டங்கள்) ஆராய்ந்து, பயனுள்ள இணக்கத்தை உறுதிசெய்யும் வகையில், கோவிட்-19 உடனடி மற்றும் திறம்பட மேலாண்மைக்குத் தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே, பல மாநிலங்கள் கோவிட் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் மாஸ்க் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளன. கேரளாவில் கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹரியானா அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட பொது மக்கள் அனைவருக்கும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.