வெள்ளிக்கிழமைகளே சிறப்பான நாட்கள்தான். அதிலும், ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் அம்மனின் வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஈடாகாது. அன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் இன்பங்கள் தேடி வந்துகொண்டே இருக்கும்.
எட்டு வகை லட்சுமிகளுக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்கிர வாரம் என்று அழைக்கப்படுவது வெள்ளிக்கிழமைதான். சிங்கத்தின் மீது பவனி வரும் அம்பிகையை வெள்ளிக்கிழமையன்று நாம் வழிபடும்போது வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற வழி பிறக்கும்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்குமே ஒரு சிறப்பு உண்டு. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம்தான் ஆடி. ஆடி வெள்ளிக்கிழமையன்று மாலையில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் பலன்கள் அனைத்தும் வந்து சேரும்.
ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலி பெண்களுக்கு ரவிக்கை துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் பெருகும். ஆடி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டால் பண மழையில் நனையலாம். பொருளை அள்ளிக் கொடுக்கும் மகாலட்சுமியை திருமகள் என்கிறோம். எட்டு வகை லட்சுமிகளின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கையை நடத்த இயலும். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம் வருகிறது.
ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றலாம். அம்மனை குளிர்விக்க தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்தூள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து அம்மன் முன் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்க வேண்டும். இதனால் நோய் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் பெருகும்.
Readmore: தமிழகம் முழுவதும்…! இன்று முதல் பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி ஆரம்பம்…!