நடைபயிற்சி என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மிக எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சியாகும். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது, உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இது உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை தடுக்க உதவுகிறது.
உடல் எடை குறைப்பு : காலையில் நடப்பது கலோரிகளை எரித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.
இதய ஆரோக்கியம் : வழக்கமான நடைபயிற்சி ரத்த அழுத்தத்தை சீராக வைத்து, இதய துடிப்பை மேம்படுத்தி, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
மனநலன் : நடைபயிற்சியின்போது வெளியாகும் எண்டார்ஃபின்கள் (endorphins) மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். இது பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் உதவும்.
தூக்கம் : காலையில் நடைபயிற்சி செய்வது, இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது.
சுறுசுறுப்பு : நடைபயிற்சி உடலுக்கு அதிக ஆற்றலை அளித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி : தினமும் நடப்பது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, பல நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
நடைபயிற்சிக்கு முன் என்ன சாப்பிடலாம்..?
காலையில் நடைபயிற்சி செல்வதற்கு முன் என்ன சாப்பிட வேண்டும் என்பது, உங்கள் நடைபயிற்சியின் நேரத்தையும், தீவிரத்தையும் பொறுத்து மாறுபடும்.
குறுகிய நடைபயிற்சி (30-45 நிமிடங்கள்) : நீங்கள் 45 நிமிடங்களுக்குள் நடைபயிற்சி செய்ய திட்டமிட்டிருந்தால், பொதுவாக எதுவும் சாப்பிட வேண்டியதில்லை. உடலில் உள்ள சேமிக்கப்பட்ட ஆற்றலே போதுமானது. தேவைப்பட்டால், நீங்கள் ஒரு சிறிய வாழைப்பழம் அல்லது 4-5 பாதாம் சாப்பிடலாம்.
நீண்ட நடைபயிற்சி (1 மணிநேரத்திற்கு மேல்) : நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடக்க திட்டமிட்டிருந்தால், உடலுக்கு உடனடி ஆற்றலை தரக்கூடிய சிறிய அளவிலான உணவை எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக ஒரு வாழைப்பழம், கைப்பிடி அளவு உலர் பழங்கள் (dates), அல்லது ஒரு சிறிய கப் ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இது நடைபயிற்சியின்போது களைப்பு ஏற்படாமல் இருக்க உதவும்.
நடைபயிற்சிக்கு செல்லும் முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். எனவே, உங்கள் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக நடைபயிற்சியை மாற்றுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
Read More : செல்வத்தை அதிகரிக்கும் குபேரர் சிலை..!! உங்கள் வீட்டில் எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் வரும்..?



