தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துப் புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரியாக இருக்கிறதா, நீக்கப்பட வேண்டிய பெயர்கள் உள்ளனவா மற்றும் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டுமா போன்ற விவரங்களை சரிபார்ப்பதே இந்தப் பணியின் நோக்கமாகும். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருத்தப் பணிகள், டிசம்பர் 4ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், சுமார் 68,467 தேர்தல் அலுவலகர்கள் வீடு வீடாகச் சென்று இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகள் குறித்து கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஒரு மாத கால அவகாசத்திற்குள், 6.34 கோடி வாக்காளர்களின் விவரங்களை எப்படி நேரில் சென்று சரிபார்க்க முடியும்? ஒரு மாதம் என்பது மிகவும் குறைவான காலம் என்றும், இந்த அவசரகதியிலான பணியால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், பல பகுதிகளில் இன்னும் வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் விண்ணப்பப் படிவங்கள் கொடுக்கும் பணியே தொடங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், தற்போது வரை தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் அதிகமான (78.09%) படிவங்கள் வாக்காளர்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் படிவங்களைப் பூர்த்தி செய்ய, வாக்காளர்கள் தங்கள் 2002 அல்லது 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்களைக் குறிப்பிட வேண்டியிருப்பதால், பலரும் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும், படிவத்தை எப்படி நிரப்புவது என்பது குறித்துத் தேர்தல் அலுவலகர்கள் சரியான ஆலோசனைகளை வழங்காததால், ஏராளமானோர் படிவங்களை தவறாக நிரப்பிவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், தவறாக நிரப்பப்பட்ட SIR படிவங்களைப் புதியதாக மாற்ற முடியுமா என்ற பொதுமக்களின் சந்தேகத்துக்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா இரண்டு படிவங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த இரண்டு படிவங்களில் ஒன்று கிழிந்தாலோ அல்லது தொலைந்து போனாலோ புதிய படிவங்கள் வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வாக்காளர்கள் SIR படிவங்களில் அடித்தல், திருத்தங்கள் செய்திருந்தாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படும். தவறாக குறிப்பிட்ட தகவல்களை அடித்துத் திருத்தி, அதற்கு மேலே சரியான விவரங்களைச் சேர்க்கலாம் என்றும், தவறாக எழுதப்பட்ட இடங்களை மறைக்க ‘ஒயிட்னர்’ (Whitener) பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆன்லைனிலும் சமர்ப்பிக்கும் வசதி :
வேலைக்குச் செல்லும் காரணத்தால், வீடு வீடாக வழங்கப்படும் SIR படிவங்களைப் பெற முடியாதவர்கள், https://www.voters.ecl.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்கள் விவரங்களை சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், ஆன்லைனில் சமர்ப்பிக்க, ஆதார் அட்டையில் உள்ள பெயர் வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப் போக வேண்டும் மற்றும் வாக்காளர் அட்டையில் மொபைல் எண்ணைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.
Read More : மதிய உணவை தவிர்ப்பவரா நீங்கள்..? ஆபத்து வரப்போகுது..!! இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்..!!



