2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.. ஏற்கனவே எ.வ வேலு மூலம் திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பு மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக முதன்முறையாக இணைந்துள்ளது..
இதை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய பிரேமலதா “ தேமுதிக திமுக உடன் கூட்டணியை இறுதி செய்துள்ளோம்.. எங்கள் கழக தொண்டர்கள் நிர்வாகிகளின் விருப்பம் திமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான்.. கேப்டன் இல்லாத சூழலில் இந்த கூட்டணி உருவாகி உள்ளது. 2016 தேர்தலிலேயே இந்த கூட்டணி அமைய வேண்டியது.. அப்போதே கலைஞர் பழம் நழுவி பாலில் விழப்போகிறது என்று கூறினார்.. 10 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி அமைந்துள்ளது.
திமுக – தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த சந்தோஷத்துடன் இந்த கூட்டணியை வரவேற்றுள்ளனர்.. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.. எத்தனை தொகுதிகள் என்பது குறித்து குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்.. அதன்பின்னர் எங்களுக்கு தொகுதிகள் என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.. மாநிலங்களவை சீட் வழங்கப்படுமா என்பதை எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவிப்போம்.. “ என்று தெரிவித்தார்..



