தங்கத்தின் விலை உயர்வு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே எட்டாக்கனியாக மாறி வரும் நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டிலும் இந்த விலையேற்ற புயல் ஓயாது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில், நடுத்தரக் குடும்பங்கள் நகை வாங்க முடியாமல் திணறி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரங்கள் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை என்றே தோன்றுகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை சுமார் 76,000 ரூபாயாக இருந்தது. ஆனால், ஓராண்டிற்குள் அதாவது 2025 டிசம்பர் நிலவரப்படி, அது 1,32,474 ரூபாய் என்ற இமாலய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு கிலோ 90,000 ரூபாய்க்கு விற்ற வெள்ளி, இன்று 2 லட்சம் ரூபாய் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
சர்வதேச அளவில் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான கோல்ட்மேன் சாக்ஸ், ஜேபி மோர்கன் மற்றும் கோடக் செக்யூரிட்டீஸ் ஆகியவை 2026-ஆம் ஆண்டிற்கான அதிரடி கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
கோல்ட்மேன் சாக்ஸ்: 2026 இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,900 டாலர்களை எட்டும் (இந்திய மதிப்பில் 10 கிராம் சுமார் ₹1.60 லட்சம்).
ஜேபி மோர்கன்: சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 டாலர்களைத் தொட வாய்ப்புள்ளது.
கோடக் செக்யூரிட்டீஸ்: இந்தியாவில் 10 கிராம் தங்கம் 1.5 லட்சத்தை எட்டக்கூடும்.
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்களது இருப்புக்காகத் தங்கத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதும், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் சாத்தியக்கூறுகளுமே இந்த விலையேற்றத்திற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதே இந்த உயர்வுக்குக் காரணமாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் 2026-ல் புது உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சூரிய ஆற்றல் தகடுகள் (Solar Panels) மற்றும் மின்சார வாகனங்களின் (EV) உற்பத்தியில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் வெள்ளியின் அளவு தேவையை விடக் குறைவாகவே உள்ளது. விநியோகப் பற்றாக்குறை தொடர்ந்தால், சர்வதேசச் சந்தையில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 70 டாலர்களைத் தாண்டி, இந்தியச் சந்தையில் ஒரு கிலோ 2.03 லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக, 2026-ஆம் ஆண்டு முதலீட்டாளர்களுக்குத் தங்கமான ஆண்டாக அமைந்தாலும், இல்லத்தரசிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது பெரும் சவாலான ஆண்டாகவே இருக்கும் என தெரிகிறது.
Read More : சொந்த மாவட்டத்தில் மாஸ் காட்டிய எடப்பாடி பழனிசாமி..!! செம குஷியில் அதிமுக..!! அதிர்ச்சியில் திமுக, தவெக..!!



