புதிய வாட்ஸ்அப் மோசடி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது, இந்தியாவின் பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) அனுப்பிய அதிகாரப்பூர்வ செய்தியை போல், தீங்கிழைக்கும் (malicious) கோப்பை பதிவிறக்கம் செய்யுமாறு பயனர்களை ஏமாற்றுகிறது. “RTO Challan” என்ற பெயரில் வரும் போலியான APK கோப்பை (Android Application Package) பலர் பதிவிறக்கம் செய்ததால், பலரின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக புகார்கள் வெளியாகியுள்ளன.
மோசடி எப்படி நடக்கிறது?
பல சமூக ஊடகப் பதிவுகளின்படி, இந்த மோசடி ஒரு வாட்ஸ்அப் அல்லது SMS மூலம் தொடங்குகிறது. சில சமயம், இது பயனருக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்தே வரும். அந்தச் செய்தியில் “RTO E-Challan” அல்லது “MParivahan Notice” எனக் கூறி, அதனுடன் ஒரு APK கோப்பும் இணைக்கப்படும்.
அந்த கோப்பை பதிவிறக்கம் செய்தவுடன், அந்த ஆப் மொபைலைக் கைப்பற்றுகிறது — பயனரின் தகவல்களை அணுகி, அதே போலியான செய்தியை அவரின் அனைத்து தொடர்புகளுக்கும் தானாக அனுப்புகிறது.
நிபுணர்கள் எச்சரிக்கை
சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ அந்த APK கோப்பில் இருக்கும் மென்பொருள் (malware) தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடியது, அல்லது பயனரின் வாட்ஸ்அப் கணக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியது. சிலர், அந்த ஆப் தானாகவே அவர்களின் வாட்ஸ்அப் தொடர்புகளுக்கு ஸ்பாம் செய்திகளை அனுப்பியதால், அவர்களின் வாட்ஸ்அப் எண்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
வாட்ஸ்அப் அல்லது SMS வழியாக வரும் எந்தவொரு APK கோப்பையும் திறக்கவோ அல்லது நிறுவவோ கூடாது.
குறிப்பாக அரசு துறை பெயரில் வரும் கோப்புகள் அல்லது செய்திகள் போலியானவையாக இருக்கலாம்.
RTO அல்லது சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வாட்ஸ்அப்பில் எந்த சலான் அறிவிப்புகளையும் அனுப்பாது.
உண்மையான e-Challan விவரங்களை சரிபார்ப்பதற்கு அதிகாரப்பூர்வ அரசு இணையதளம் அல்லது Parivahan போர்டல் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே நிறுவியிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக இணைய இணைப்பை துண்டிக்கவும்.
நம்பகமான அன்டிவைரஸ் ஆப் மூலம் முழுமையான ஸ்கேன் நடத்தவும்.
அந்த போலியான APK கோப்பை அகற்றவும்.
அனைத்து முக்கிய கடவுச்சொற்களையும் மாற்றவும்.
மேலும், இத்தகைய செய்திகளை யாருக்கும் அனுப்ப வேண்டாம்.
இது ஒரு தீவிரமான சைபர் மோசடி என்பதால், பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Read More : அதிக ஆபத்து.. மில்லியன் கணக்கான கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை! முழு விவரம் இதோ..!



