2010ஆம் ஆண்டு நடிகர் சூர்யா தொடங்கிய அகரம் பவுண்டேஷன், கல்வி வாய்ப்புகளின்றி வாழும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்து வருகிறது. இதன் 15ஆம் ஆண்டு விழா, நேற்று, சென்னையின் புறநகரில் உள்ள சாய்ராம் கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், சு. வெங்கடேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி தனது உரையில் சில உணர்ச்சிபூர்வமான தகவல்களை பகிர்ந்தார். அவரின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், அகரம் தொடங்கும்போது எங்களிடத்தில் பணம் இல்லை. அப்போது அண்ணி ஒன்று கூறினார்கள். நாம் என்ன எல்லாத்தையும் பணத்தை வைத்தா தொடங்கினோம். அன்பைக் கொண்டுதானே தொடங்கினோம். அன்பைக் கொண்டே தொடங்குவோம் என்று கூறினார். அண்ணி அன்றைக்கு அப்படி சொல்லவில்லை என்றால் இன்றைக்கு இது சாத்தியமா என்று தெரியாது.
கொரோனா காலத்தில் பல மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் இல்லை என்று எங்களின் அகரம் மாணவர்கள் மூலம் தகவல் தெரிந்தவுடன் நான் செய்கிறேன் என்று முன் வந்தார் அண்ணி. எனக்கு இப்போதுதான் தெரியும் அகரத்தின் மாதம் 300 என்ற திட்டத்திற்கு, தியாவும் தேவ்வும் தங்களது பாக்கெட் மணியை கொடுத்து வருகிறார்கள் என்று. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சின்ன வயசுல டிரெயின்ல ஊருக்கு போகும்போது போர்டர்ஸ் வருவாங்க. 50 ரூபா ஆகும்னு சொல்லுவாங்க. அப்பா சரி வா-னு கூப்பிட்டு போவாங்க. 50 ரூபா அதிகம்னு அப்பா கிட்ட சொல்லுவேன். ஏன்னா காசு விஷயத்துல ரொம்ப கறாரா இருப்பேன். ஆனா அங்க போனா அப்பா நூறு ரூபா எடுத்து கொடுப்பாரு. 50 ரூபாயே அதிகம் 100 ரூபா ஏன் கொடுக்றிங்க-னு கேட்டா, அந்த நூறு ரூபா வச்சு வீடு கட்டிடுவானா, வீட்டுக்கு போனா புள்ளைக்கு ஏதாவது சாப்ட வாங்கி கொடுப்பான்-னு சொல்லுவாரு.
பத்து வயசுல இத கேட்டேன். இன்னைக்கு வரைக்கும் அது எனக்கு மறக்கவே இல்லை. இந்த மாதிரி விஷயத்தை நான் தொடர்ந்து கேட்டுகிட்டே இருக்கேன். நாம நல்லதேதான் செய்வோம். நம்ம கூட இருக்கிறவங்களும் நல்லதேதான் செய்வாங்க. எல்லாரும் ஒன்று சேர்வோம். அகரம் நம்முடைய அகரமாக இருக்கட்டும். தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்போம்” என்று கூறினார்.
Read more: மாதவிடாய் காலத்தில் நடைப்பயிற்சி செய்றீங்களா..? இவர்களெல்லாம் தவிர்ப்பது நல்லது..!