தெரு நாய்கள் தொடர்பான விவாதம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு துயரமான சம்பவம், இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தையடுத்து, தெரு நாய்கள் மக்களிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்குவதாக பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இதனை கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட், தெரு நாய்களை பாதுகாப்பு முகாம்களில் அடைத்து வைக்க உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, 2024ஆம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் படி, சென்னை நகரில் மட்டும் சுமார் 1.8 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இதில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் தடுப்பூசி மற்றும் கருத்தடை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கிறது. இருப்பினும், தெருநாய்கள் எண்ணிக்கை மற்றும் அவற்றால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த சூழலில் தான், நாய்களிடம் இருந்து நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து கோவையைச் சேர்ந்த நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “தெரு நாய்கள் பொதுவாக மனிதர்களிடம் விரோதம் காட்டுவதில்லை. ஆனால், சில நேரங்களில் எச்சரிக்கைகள் இல்லாமல் தாக்கும் நாய்களும் இருக்கலாம். பசி, பயம் அல்லது பாதுகாப்பு உணர்வால் நாய்கள் சில சமயம் தாக்கும். வேட்டை சமூகமாக இருந்த காலத்தில் இருந்தே நாய்கள் மனிதர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன.
ஆனால், நகரமயமாக்கலின் தாக்கம் இன்று அவற்றின் இயல்பையும் வாழ்வு முறையையும் மாற்றியுள்ளது. பெருநகரங்களில் நாய்கள் தனித்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இது அவற்றின் உடல், மனநலத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பொதுவாக நாய்களுக்கு 3 முக்கிய தேவைகள் இருக்கின்றன. உணவு, சுதந்திரமான நடமாட்டம், மற்றும் உயிரியல் தேவைகள். இவை கிடைக்காத பட்சத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன.
வளர்ப்பு நாய்கள், போதுமான ஊட்டச்சத்து உணவையும், பாதுகாப்பான சூழலையும் பெறலாம். ஆனால், அவற்றின் இயல்பான சுதந்திரம், உயிரினங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைகள், அவற்றில் இல்லாமல் போகிறது. இதுவே சில சமயங்களில் வளர்ப்பு நாய்களிலும் ஆத்திரம், கடிக்கும் நிலை உருவாகிறது.
வயதானவர்களை தெரு நாய்கள் துரத்தினாலும், அவர்கள் சில நேரங்களில் சத்தம் போடுவது, மிரட்டல்களுக்கு பயந்து பின்வாங்கிடும். ஆனால், குழந்தைகளுக்கு அது மாதிரியான எதிர்வினையை காட்டும் திறன் ருக்காது. இதனால் தெரு நாய்கள் முதலில் குழந்தைகளை குறிவைக்கின்றன. அதேபோல், பேரிடர் காலங்களில் தெரு நாய்கள் உணவு இல்லாமல் இருக்கும். அந்த சமயத்தில், மனிதர்களை தாக்குவது, துரத்துவது என்பது அதிகமாக இருக்கும்.
தெருநாய்களை பொறுத்தவரை தனியாக இருப்பதைவிட குழுவாக இருக்கும்போது தான் அதன் ஆபத்துகள் அதிகம் இருக்கும். ஆனால், அனைத்து தெரு நாய்களும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளாது. தற்போது நாய்கள் மனிதர்களின் தலையீடு இல்லாமல் தனியாகவே வாழ கற்றுக் கொண்டுள்ளன. தங்களுக்கு உணவு கிடைப்பதை வைத்து, தங்களுடைய எல்லைகளை தீர்மானித்துக் கொள்கின்றன.
எப்போதும் ஒரே இடத்தில் தொடர்ந்து உணவு கிடைத்து வந்தால், நாய்கள் அங்கேயே இருக்கும். உணவு கிடைப்பது நின்று விட்டால், மாற்று இடம் நோக்கி நகரும். அதேபோல், தெரு நாய்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் அதன் நடத்தையில் மாற்றத்தை கொண்டு வருகின்றன.
குறிப்பாக நாய் மீது கல் தூக்கி எறிவது, கட்டையால் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அது மனிதர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும். அதேபோல், தங்களுடன் இருக்கும் நாய் மீது வாகனம் ஏதேனும் மோதிவிட்டால், அந்த நாய்கள் சில சமயங்களில் வாகனங்களைக் கண்டால் துரத்திச் செல்லும்.
எனவே, பைக்கில் செல்லும் பொழுது நாய்கள் துரத்தினால் சற்று வேகமாக செல்ல வேண்டும். நடந்து செல்லும்போது அச்சம் இருந்தால், குச்சி அல்லது வேறு பொருளை வைத்துக் கொள்ளலாம். அதேபோல், தெரு நாய்கள் உங்களைத் துரத்தினால் ஓடக்கூடாது. அப்படி ஓடினால், நீங்கள் தான் ஏதோ அதை அச்சுறுத்துவதாக நினைத்து உங்களை துரத்த ஆரம்பிக்கும்.
ஆனால், நாயின் கண்களை நேராக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தாக்குதலுக்கு நீங்கள் தயாராக இருப்பதாக எண்ணும். அப்போது, உங்கள் கையில் இருக்கும் ஏதேனும் பொருள் இருந்தால் எதிர் திசையில் தூக்கி வீசுங்கள். இதனால் நாயின் கவனம் சிதறும். நாய் உங்களை நெருங்கி வருவது போல தோன்றினால் சத்தம் போடாமல், மெதுவாக விலகிச் செல்ல வேண்டும்.
நாய் உங்களை துரத்துவதற்கு காரணம் அதனுடைய எல்லையில் நீங்கள் இருக்கலாம். எனவே, அமைதியாக அங்கிருந்து செல்வது நல்லது. இவை அனைத்தும் நாயின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான சில எளிய வழிமுறைகள் தான். ஆனால், நாய் உங்களை கடித்துவிட்டால், கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.