தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான முதற்கட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் நிறைவாக, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் திருவிழாவிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிப் பட்டியல் வெளியான கையோடு, பிப்ரவரி மாத இரண்டாம் பாதியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகத்திற்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவினர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளை நடத்த உள்ளனர். இதில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி வசதிகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் 2026 மே 10-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்னதாகவே புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும். பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் நிலவும் கடும் கோடை வெப்பம், பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகள் மற்றும் விடுமுறைக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி மாத ஆலோசனைகளுக்குப் பிறகு, மார்ச் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



