முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடியாலா ஜெயிலில் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. இந்த வதந்திகளுக்கு ‘Afghanistan Times’ என்ற சமூக ஊடக கைமுறை வெளியிட்ட பதிவு தான் காரணம். அந்த பதிவில் “ இம்ரான் கான் “கொல்லப்பட்டார் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது..” என்று பதிவிட்டிருந்தது.. ஆனால் இந்த தகவல்களை பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை..
இம்ரான் கானின் தற்போதைய நிலை
இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் பல வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ளார். மேலும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை சந்திக்க அறிவிக்கப்படாத தடை விதிக்கப்பட்டுள்ளது.. கைபர்-பக்துன்க்வா முதல்வர் சோஹைல் அஃப்ரிடி,
இம்ரான் கானைச் சந்திக்க 7 முறை தொடர்ந்து முயன்றும் ஜெயில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.
இம்ரான் கானின் சகோதரிகள் குற்றச்சாட்டு
இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் நூரீன் நயீசி, அலீமா கான், டாக்டர் உஸ்மா கான் ஆகியோர் கடந்த வாரம் அடியாலா ஜெயிலின் வெளியில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டபோது, பஞ்சாப் போலீசால் “கொடூரமாகவும் திட்டமிட்டு” நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்ளானதாக கூறியுள்ளனர்.
அவர்கள் பஞ்சாப் போலீஸ் தலைமை அதிகாரி உஸ்மான் அன்வருக்கு எழுதிய கடிதத்தில்: தாங்கள் எந்த வகையிலும் வன்முறை செய்யவில்லை, சாலை மறியல் அல்லது பொதுமக்கள் இயக்கத்துக்கு தடையாக எதையும் செய்யவில்லை, வெறுமனே இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலைப்பட்டு அமைதியாக போராட்டம் செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நூரீன் நயீசி இதுகுறித்து பேசிய போது “எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அந்த பகுதியில் உள்ள வீதி விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன. அதற்குப் பிறகு பஞ்சாப் போலீஸ் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்தியது.” என்று தெரிவித்தார்..
முடியைப் பிடித்து இழுத்து தரையில் தள்ளி, சாலையில் இழுத்துச் சென்றதாகவும், காயங்களும் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஜெயில் நிர்வாகத்தின் பதில்
அடியாலா ஜெயில் நிர்வாகம், இம்ரான் கானின் உடல்நிலையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டது எனப்படும் செய்திகள் “அடிப்படையில்லாதவை” எனத் தெளிவுப்படுத்தியுள்ளது. அவர் முழுமையாக நலமாக உள்ளார்.. தேவையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : வெள்ளம், நிலச்சரிவுகளை தொடர்ந்து.. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கையா?



