ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானுடன் தொடர்புடையதாக கருதப்படும் ருத்ராட்சைக்கு மிகுந்த தனிச் சிறப்பு உண்டு. இந்த தெய்வீக மணியை அணிவது, மனதின் அமைதிக்கும், உடலின் சீரான செயல்பாட்டிற்கும் உகந்தது என்று நம்பப்படுகிறது. எனினும், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, ருத்ராட்சை அணியும்போது பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விதிகள் உள்ளன. விதிகளைப் பின்பற்றி அணிவது பல்வேறு நன்மைகளைத் தரும் என்றும், மீறினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது.
ருத்ராட்சை இயற்கையாகவே ஆண்டிபயாடிக் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இது நோய் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதைவிட முக்கியமாக, இது இயற்கையிலேயே நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி பெற்றது. ருத்ராட்சை நம் உடலுடன் ஒட்டியிருக்கும்போது, நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் அதிகமாக ஈர்க்கப்படுகின்றன.
இதன் காரணமாக, மனதில் ஒரு தெளிவு, நிம்மதி உணர்வு மற்றும் ஆத்ம திருப்தி ஆகியவை கிடைக்கின்றன. மேலும், பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் இருமல் போன்ற சில அபாயகரமான நோய்களின் வீரியத்தை குறைக்க இது உதவுவதாகவும் நம்பப்படுகிறது. ருத்ராட்சம் அணிபவர்களுக்கு ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ருத்ராட்சை அணிவது குறித்து பலருக்கும் சந்தேகம் இருப்பதுண்டு. பெண்கள் அணியலாமா, மாதவிடாய் நாட்களில் அணியலாமா, இல்லறத்தில் ஈடுபடும்போது அணியலாமா போன்ற கேள்விகள் எழலாம். இவை மூன்றும் இயற்கையாக நிகழக்கூடிய நிகழ்வுகள் என்பதால், அந்த நேரங்களில் ருத்ராட்சை அணிவதில் தவறில்லை என்று ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, ஐந்து முகங்கள் கொண்ட ருத்ராட்சை அணிந்தவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் அதிகம் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
இந்த ருத்ராட்சையை சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை ஆகிய கயிறுகளில் அணியலாம். வசதி இருந்தால் தங்கம் அல்லது வெள்ளியில் கூட அணியலாம். ஆனால், கருப்பு கயிறில் மட்டும் ருத்ராட்சை அணியக்கூடாது.
எப்போது ருத்ராட்சை அணியக்கூடாது..?
* இறந்த வீடு அல்லது தகனம் செய்யும் இடத்திற்கு செல்லும்போது ருத்ராட்சை அணியக்கூடாது.
* படுக்கை அறையில், குறிப்பாக உறங்கும்போது ருத்ராட்சை அணியக்கூடாது. ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் ருத்ராட்சை மாலையைக் கழற்றி, தலையணைக்கு அடியில் வைத்துவிட்டுப் படுப்பது, மனம் அமைதி பெறவும், நல்ல தூக்கம் வரவும் உதவும்.
* பிறந்த குழந்தையை பார்க்கச் செல்லும்போது ருத்ராட்சை அணிய கூடாது என்று நம்பப்படுகிறது.
* ருத்ராட்சம் அணிந்திருக்கும்போது மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், அசைவ உணவு (இறைச்சி) சாப்பிடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
* இந்த விதிகளை மீறினால், ருத்ராட்சையின் தூய்மை கெட்டுப்போகும் என்றும், அதனால் கிடைக்கவிருந்த நன்மைகள் தடைபடும் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த சமயங்களில் ருத்ராட்சையை கழற்றி வைத்துவிடுவது நல்லது.



