வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் தீவிர புயலாக இன்று மாலை அல்லது இரவு ஆந்திரா அருகே கரையை கடக்க உள்ளது.. இதனால் பல மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாக்க வாய்ப்புள்ளது என்றும் இருப்பினும் கரையை கடந்து முடிக்க இரவு வரை தாமதமாகலாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.. ஆந்திராவின் காக்கிநாடா பகுதிக்கு அருகில் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே இந்த புயல் கரையைக் கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது..
மோன்தா புயல் கரையை கடப்பதால் பாதிக்கக்கூடிய இடங்கள் :
ஆந்திரப் பிரதேசம்
புயலின் தாக்கத்தைத் தணிக்க மாநில அரசு தயார்நிலையை முடுக்கிவிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் உயிர்களைப் பாதுகாக்கவும் சேதத்தைக் குறைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பெத்தப்பள்ளி, ஜெயசங்கர் பூபல்பள்ளி மற்றும் முலுகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வடகிழக்கு மாவட்டங்கள் மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் உள்ளன. தெற்கு ஆந்திராவில் அக்டோபர் 29 புதன்கிழமை வரை 20 செ.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒடிசா
மல்கன்கிரி, கோராபுட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரங்பூர், கலஹண்டி மற்றும் காந்தமால் ஆகிய எட்டு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து மக்களை ஒடிசா அரசு வெளியேற்றியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை, ODRAF மற்றும் தீயணைப்பு சேவையைச் சேர்ந்த 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அடங்கிய மொத்தம் 140 மீட்புக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை அக்டோபர் 30 ஆம் தேதி வரை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே பல ரயில்கள் ரத்து, மாற்றுப்பாதை மற்றும் குறுகிய நேர நிறுத்தம் செய்யப்படுவதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவித்துள்ளது.
நபரங்பூர், கலஹண்டி, காந்தமால், நயாகர், நுவாபாடா, போலங்கிர், சோனேபூர், பவுத், குர்தா, பூரி மற்றும் பர்கர் மாவட்டங்களில் 7 முதல் 20 செ.மீ வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குல், தேன்கனல், கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரபாதா, ஜாஜ்பூர், கியோஞ்சர், பத்ராக், பாலசோர், மயூர்பஞ்ச், சம்பல்பூர், தியோகர், ஜார்சுகுடா மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களுக்கு 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசத்தைத் தவிர, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியிலும் அக்டோபர் 30 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரபூர், கட்சிரோலி, வர்தா, வாஷிம், யவத்மால், பந்தாரா, கோண்டியா மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : மாணவர்களே கவனம்.. இந்த 22 பல்கலைக்கழகங்கள் போலியானவை.. UGC எச்சரிக்கை.. முழு லிஸ்ட் இதோ..



