திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்த இளங்கோவன் (40) என்ற லாரி கிளீனருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை சாலையோரம் தங்கியிருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் உறவு, கொலையில் முடிந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளங்கோவன், மாதுவுடன் பழகி வந்த நிலையில், அவரை தனது வீட்டிற்கே அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
சம்பவத்தன்று, மாது நீண்ட நேரம் வேறு ஒருவரிடம் செல்போனில் பேசுவதை இளங்கோவன் கவனித்துள்ளார். இதனால் மாதுவுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொண்ட இளங்கோவன், அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 26ஆம் தேதி இரவு, மாதுவை தன் வீட்டிற்கு அழைத்து வந்த இளங்கோவன், மீண்டும் அவர் செல்போனில் யாரிடம் பேசினார் என கேட்டுச் சண்டையிட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற இளங்கோவன், வீட்டில் இருந்த சிறிய குழவிக்கல்லை எடுத்து மாதுவின் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் மாதுவின் முகம், வாய் மற்றும் பற்கள் சிதைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
மாது மயங்கிக் கிடப்பதைப் பார்த்த இளங்கோவன், அவரை அப்படியே விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, மாதுவுக்கு மூச்சுப் பேச்சு இல்லை. அதிர்ச்சியடைந்த இளங்கோவன், அவரை மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, முகம் சிதைந்த நிலையில் இருந்த மாதுவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளங்கோவனைப் பிடித்து விசாரித்தபோது தான் கொலைக்கான உண்மை வெளிவந்தது.
மாது வேறு ஒருவருடன் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், குழவிக்கல்லால் முகத்தைத் தாக்கி சிதைத்ததாகவும், மறுநாள் வந்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதால் சிகிச்சைக்காக அழைத்து வந்ததாகவும் இளங்கோவன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் இளங்கோவன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
Read More : வெற்றிகரமான நாளுக்கு விதை போடுவது எப்படி..? உங்கள் காலைப் பொழுதை மாற்றும் 10 ரகசியங்கள்..!!



