பாஜக – அதிமுக இணக்கமாக இல்லை என்று சொல்ல திருமாவளவன் யார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அந்த வகையில் 2-வது நாளான இன்று கோவையில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. கோவை புளியகுளம் விநாயகர் கோயில் சந்திப்பில் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. குடும்ப ஆட்சி நடக்கிறது.. மக்கள் பிரச்சனைகள் தீர்க்க முடியாத திறமையற்ற அரசாங்கமாக இது இருக்கிறது.. ஒரு பொம்மை முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.. அதிலிருந்து தமிழகத்தை மீட்போம்..
எப்போதும் அதிமுகவில் பிரச்சனை இருக்கிறது என்று கூறுகின்றனர்.. ஆனால் எங்களிடம் பிரச்சனை இல்லை.. திமுக கூட்டணியில் தான் பிரச்சனை இருக்கிறது.. சமீபத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பெ.சண்முகம் திமுக மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்று கூறினார்..
தொல். திருமாவளவன், பாஜக – அதிமுக இணக்கமாக இல்லை என்று அவர் கூறுகிறார்.. இவருக்கெல்லாம் டாக்டர் பட்டம்.. ஏன் நோபல் பரிசே கொடுத்து விடலாம்.. எங்களுக்கும் எங்கள் கூட்டணி கட்சிக்கும் இணக்கம் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? அதிமுக கூட்டணி ஒன்றாக உள்ளது. உங்களுக்கு தான் கருத்து வேறுபாடு வந்து கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறுகிறார்.. உள்ளுக்குள் ஒன்றை வைத்து பேசுகிறார்.. உங்கள் கூட்டணியில் தான் குழப்பம் ஏற்படுகிறது..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது நாங்கள் அவரை சந்தித்தோம்.. கூட்டணி முடிவானது.. அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக – பாஜக கூட்டணிக்கு , அதிமுக தலைமை தாங்கும் என்றும், 2026 தேர்தலில் இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் இபிஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் குறிப்பிட்டார். எனவே எங்கள் கூட்டணி தெளிவாக உள்ளது.. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது.. ஏதேதோ பேசுகின்றனர்.. எங்கள் கூட்டணி அமைப்பது எங்கள் விருப்பம்..
இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்குள் வரும்.. நமது கூட்டணியை பற்றி திமுகவிற்கு பயம் வந்துவிட்டது.. 2026 தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகள் வெல்லும்.. திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின்.. ஏனெனில் அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.. திமுக ஆட்சியில் தமிழகம் அவல நிலையில் உள்ளது.. மக்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை.. கண்ணை இமை காப்பது அதிமுக ஆட்சியில் மக்களை காப்போம்..” என்று தெரிவித்தார்.