பல ஆண்டுகளாக நீதிமன்ற அறைகளில் கிசுகிசுக்கப்பட்டதும், விசாரணை ஆவணங்களில் வெளிப்பட்டதும், உலகம் முழுவதும் அதிர்ச்சியுடன் பேசப்பட்டதுமான ஒன்று தான் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் தனியார் தீவு. அது வெறும் ஆடம்பர விடுமுறைத் தீவாக இல்லை; நவீன காலத்தின் மிகக் கொடூரமான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் அடையாளமாக மாறியது.
எப்ஸ்டீன் இறந்த பிறகும், ஒரு கேள்வி தொடர்ந்து உலக மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. இந்த குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் அந்த தீவுக்கு என்ன ஆனது? இன்று அந்த தீவின் உரிமையாளர் யார்?
உலகை அதிர வைத்த தீவும் ஜெஃப்ரி எப்ஸ்டீனும்
ஒருகாலத்தில் செல்வாக்கு மிகுந்த அமெரிக்க நிதி முதலாளியாக இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் தொடர்புடையவராக இருந்தார். அமெரிக்க வெர்ஜின் தீவுகளில் உள்ள ‘லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்’ (Little Saint James) என்ற தனியார் தீவை, அவர் 1998-ஆம் ஆண்டு வாங்கினார். 2019-ல் அவர் இறக்கும் வரை, அந்த தீவு அவரது சொத்தாகவே இருந்தது.
இந்த தீவில், பணமும் அதிகாரமும் கொண்டவர்களுக்காக ரகசிய விருந்துகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எப்ஸ்டீனின் தனியார் விமானமான ‘லோலிட்டா எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்பட்ட விமானத்தில் சிறுமிகள் இந்த தீவுக்கு அழைத்துவரப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து கடத்தப்பட்ட சிறுமிகள் பெரும் பணக்காரர்களின் காம இச்சைக்கு பயன்படுத்தப்பட்டனர்.. இதன் காரணமாக, அந்த தீவு உலகளவில் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தின் சின்னமாக மாறியது.
நீதிமன்ற ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் வெளியானதுடன், லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவு, உலகம் முழுவதும்
குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தீவு என்று அழைக்கப்படத் தொடங்கியது.
லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவில் என்ன இருந்தது?
சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவு, கரீபியன் கடலில், செயின்ட் தாமஸ் தீவிலிருந்து இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவில், ஆடம்பர வில்லாக்கள், விருந்தினர் இல்லங்கள், நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் தெளிவான நீலக் கடல் காட்சிகள் உள்ளன.
இந்த வசதிகளை பயன்படுத்தி, பொதுமக்களின் பார்வைக்கு அப்பால் ரகசிய நிகழ்ச்சிகளை எப்ஸ்டீன் நடத்தியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
அழகான சுற்றுலா தலமாக இருந்த இந்த தீவு, பின்னர் சிறார்களுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளால் அறியப்படும் இடமாக மாறியது.
எப்ஸ்டீனின் மரணமும் அதற்குப் பிந்தைய அதிர்வும்
2019-ஆம் ஆண்டு, சிறார்களை பாலியல் கடத்தலில் ஈடுபட்டதாக அமெரிக்க அரசால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், விசாரணைக்காக காவலில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், தன் சிறை செல்லில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மரணம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலேயே இருந்து வருகிறது..
அதன்பின், ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ் (Epstein Files) என அழைக்கப்படும் ஆவணங்கள் வெளியாகத் தொடங்கின. அவை எப்ஸ்டீனின், தொடர்பு வலையமைப்பு, பண பரிவர்த்தனைகள், சொத்துகள், அமெரிக்க வெர்ஜின் தீவுகளில் இருந்த தீவுகள் போன்ற பல தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
இன்று எப்ஸ்டீனின் தீவின் உரிமையாளர் யார்?
எப்ஸ்டீன் இறந்த பிறகு, பிளாக் டையமண்ட் கேபிடல் மேனேஜ்மெண்ட் என்ற தனியார் முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனரும், பெரும் பணக்காரருமான ஸ்டீபன் டெக்காஃப் இந்த தீவை வாங்கினார். அவர் லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவுடன் சேர்த்து, அருகிலுள்ள
‘கிரேட் செயின்ட் ஜேம்ஸ்’ தீவையும் வாங்கினார். இந்த இரண்டு தீவுகளும் சேர்ந்து 230 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டவை. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 60 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது.. எப்ஸ்டீன் காலத்திற்குப் பிறகு, இந்த தீவுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருந்தன.
எதிர்காலத்தில் என்ன திட்டம்?
ஸ்டீபன் டெக்காஃப், இந்த தீவுகளை உயர் தர ஆடம்பர சுற்றுலா தலமாக மாற்ற திட்டமிட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஐந்து நட்சத்திர ஹோட்டல், 25 அறைகள் கொண்ட ரிசார்ட் போன்றவற்ற அமைக்கும் திட்டமிட்டுள்ளதாக குறப்படுகிறது.. ஒருகாலத்தில் அவப்பெயரால் அறியப்பட்ட இந்த இடத்தை, சட்டபூர்வமான சுற்றுலா மையமாக மாற்றுவது தான் அவரது நோக்கம்.
எனினும், இந்த திட்டங்கள் விரைவாக முன்னேறவில்லை. தீவின் சர்ச்சைக்குரிய கடந்த காலம், அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் உணர்ச்சி மற்றும் எதிர்ப்புகள்
மறுசீரமைப்பில் தாமதம் ஏற்பட காரணமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலத்தை மறக்க முடியாத தீவு
உரிமையாளர் மாறியிருந்தாலும், லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவு இன்னும் எப்ஸ்டீனின் நினைவோடு இணைந்தே உள்ளது. பலருக்கு, அது வெறும் ஒரு தீவு அல்ல.
அதிகாரம், செல்வம் மற்றும் செல்வாக்கு எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எச்சரிக்கை சின்னம் ஆகவே அது பார்க்கப்படுகிறது. மறுசீரமைப்பு திட்டங்கள் நடந்து வந்தாலும், இந்த தீவு தனது இருண்ட கடந்த காலத்திலிருந்து உண்மையில் விடுபட முடியுமா? என்ற கேள்வியுடன், உலகம் இன்னும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
Read More : 2027 ஆம் ஆண்டுக்குள் 99% வேலைகள் மறைந்து போகலாம், இந்த 5 வேலைகள் மட்டுமே இருக்கும்: AI நிபுணர் ஷாக் தகவல்..!



