கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே போல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் உடனடியாக கரூர் விரைந்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் அன்றிரவே கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..
ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. எனினும் கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுக செய்த சதியே காரணம் என்று சமூக வலைதளங்களில் தவெகவினர் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.. குறிப்பாக விஜய் பேசிய போது செருப்பு வீசப்பட்டது என்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனவும் சம்பவம் நடந்த உடனே எப்படி செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்றார் என்றும் பல கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறது..
இந்த நிலையில் கரூர் தவெக பரப்புரையில் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான புதிய வீடியோ வெளியாகி உள்ளது.. அதன்படி விஜய் பேசத் தொடங்கிய போதே அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.. அப்போதே பலர் மயங்கி விழுந்ததும், அந்த மோசமான சூழல் குறித்து விஜய்யின் கவனத்தை ஈர்க்கவே அவர் மீது செருப்பு வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது.. செருப்பு மட்டுமின்றி கட்சிக் கொடி, தண்ணீர் பாட்டீல் என கையில் கிடைக்கும் பொருட்களை அங்கிருந்தவர்கள் தூக்கி எறிவதையும் பார்க்க முடிகிறது.. தங்களை நோக்கி பார்க்கும் படி பலர் சைகை செய்வதையும் பார்க்க முடிகிறது.. ஒரு கட்டத்தில் விஜய்யின் பவுன்சர் இதுகுறித்து தகவல் தெரிவித்த உடன், விஜய் அவர்களை பார்த்து தண்ணீர் வேண்டுமா என்று தண்ணீர் பாட்டிலை போடுகிறார்..
காலணி வீசிய நபரை சுற்றி பலரும் மயக்கம் அடைந்திருப்பதும், பதற்றமான சூழல் இருப்பதும் அந்த காட்சிகளில் பார்க்க முடிகிறது.. மேலும் மயக்கமடைந்தவர்களை போலீசார் மீட்டு அவசரமாக கொண்டு செல்வதையும் அதில் காண முடிகிறது.. விஜய்யின் கவனத்தை ஈர்க்கவே செருப்பு வீசப்பட்டதா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்..



