கிரெடிட் கார்டு என்பது இன்றைய காலத்தில் பலரது பாக்கெட்டுகளில் இருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அவர் பயன்படுத்திய கடனுக்கு யார் பொறுப்பு? அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் ஒரு விரிவான அலசலை இங்கே காண்போம்.
குடும்பத்தினர் கடனை செலுத்த வேண்டுமா..?
சட்டப்படி பார்த்தால், கிரெடிட் கார்டு என்பது ஒரு ‘பிணையில்லா கடன்’ (Unsecured Loan) ஆகும். அதாவது, எந்தவித சொத்துகளையும் அடமானம் வைக்காமல் தனிநபரின் வருமானத்தை நம்பி வழங்கப்படும் கடன். எனவே, கார்டு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் அல்லது வாரிசுகள் அந்தச் சட்டரீதியான கடனைத் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கடன் கொடுத்த வங்கி, இறந்தவரின் குடும்பத்தினரைத் தொந்தரவு செய்யவோ அல்லது கடனைச் செலுத்தச் சொல்லி வற்புறுத்தவோ சட்டத்தில் இடமில்லை.
இறந்தவரின் சொத்துகளில் இருந்து வசூலிக்கப்படுமா..?
குடும்பத்தினர் சொந்தப் பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. இறந்த நபரின் பெயரில் சொத்துகள் (வீடு, நிலம், வங்கி இருப்பு) இருந்து, அவை வாரிசுகளுக்கு மாற்றப்படும் பட்சத்தில், அந்தச் சொத்துகளின் மதிப்பிற்கு உட்பட்டு கடனை வசூலிக்க வங்கிக்கு உரிமை உண்டு. ஆனால், அந்தச் சொத்துகளின் மதிப்பைத் தாண்டி கடன் தொகை இருந்தால், மீதமுள்ள தொகையை வங்கி ‘வாராக்கடன்’ (Write-off) கணக்கில்தான் சேர்க்க வேண்டும்.
கூட்டு கார்டுகள் (Add-on/Joint Cards) வைத்திருந்தால் நிலை என்ன..?
ஒருவேளை அந்த கிரெடிட் கார்டு ‘ஜாயிண்ட் அக்கவுண்ட்’ (Joint Account) ஆகவோ அல்லது குடும்ப உறுப்பினரின் பெயரில் ‘ஆட்-ஆன்’ (Add-on) கார்டு வழங்கப்பட்டிருந்தாலோ நிலைமை மாறும். இதில் முதன்மை உறுப்பினர் இறந்தால், அந்த கார்டைப் பயன்படுத்தும் மற்றொரு நபர் கடனைச் செலுத்த முழுப் பொறுப்பாவார். ஏனெனில், அந்த ஒப்பந்தத்தில் இருவருமே கடனுக்குப் பொறுப்பேற்று கையெழுத்திட்டிருப்பார்கள்.
குடும்பத்தினர் செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் என்ன..?
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தவுடன், குடும்பத்தினர் செய்ய வேண்டிய முதல் வேலை, சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தகவல் தெரிவிப்பதுதான். இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து அந்த கார்டு கணக்கை உடனடியாக முடக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அபராதத் தொகை மற்றும் வட்டி கூடிக்கொண்டே போகும். மேலும், காப்பீடு (Credit Shield/Insurance) உள்ள கார்டாக இருந்தால், அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் மூலமாகவே கடனைத் தீர்க்க முடியும்.



