தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி பற்றிய ஒரு உளவுத்துறை அறிக்கை சமீபத்தில் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பாஜக தனது அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையில் கூறப்பட்ட விபரங்கள் உண்மையாக இருந்தால், அது தமிழக தேர்தல் சூழலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அப்படி அந்த ரிப்போர்ட்டில் என்ன இருந்தது..? விரிவாக பார்க்கலாம்..
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில், இந்த முறை இளைஞர்கள் எந்தக் கட்சியை ஆதரிப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகையே இதற்கு காரணம்.. இந்த சூழலில் தான் இளைஞர்களின் வாக்குகள் பல தொகுதிகளில் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறக்கூடும் என்று டெல்லிக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாம்..
தவெகவுக்கு செல்லும் இளைஞர்கள் வாக்குகள் திமுகவின் இளைஞர் ஆதரவையும், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியையும் கணிசமாக பாதிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 18 முதல் 25 வயதுக்குள் உள்ள புதிய வாக்காளர்கள் மற்றும் எந்தக் கட்சியை சேராத நடுநிலை வாக்காளர்கள் விஜய்க்கு வாக்களிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது கடினமாக இருக்கும் என்ற அரசியல் நிலைமையில், டெல்லி அரசியல் தலைமையின் கவனம் தற்போது விஜய்யின் மீது திரும்பியுள்ளது. ஒருவேளை தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டமன்றம்’ உருவானால், விஜய்யின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழலை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது..
தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் வாய்ப்பு அதிகம் என பாஜக மேலிடம் கருதுகிறது. இந்த பின்னணியில் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் பார்க்கப்படுகின்றன. “தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேர்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி NDA கூட்டணியின் ஆட்சியை அமைப்போம்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது” என்ற அவரது கூற்று, சாதாரண அரசியல் கருத்தாக அல்லாமல், தேர்தல் பிந்தைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், வாக்குகளைப் பிரிக்கும் திறன் கொண்ட புதிய அரசியல் சக்தி தேவைப்படுகின்றது. அந்த வகையில் விஜய்யின் தவெக கட்சியை பாஜக முக்கியமான காரணியாகக் கணக்கில் எடுத்துள்ளது. அத்வாலே வெளியிட்ட கருத்தும் இதற்கான ஒரு தெளிவான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
விஜய்யின் வருகையால் தங்கள் வாக்குவங்கி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திமுகவும் அதிமுகவும் தங்கள் தேர்தல் வியூகங்களை அமைத்து வருகின்றன.. தனது வாக்கு வங்கியை உறுதியாக வைத்திருக்க நலத்திட்டங்களையும் ‘திராவிட மாடல்’ பிரச்சாரத்தையும் இளைஞர்களிடம் தீவிரமாக கொண்டு செல்ல முனைவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், விஜய்யின் வருகையால் வாக்குகள் பிரியாமல் இருக்க மாவட்ட வாரியாக புதிய உத்திகளை வகுத்து வருகிறது.
மொத்தத்தில், விஜய்யின் அரசியல் வருகை பழைய கட்சிகளின் வலுவான ஆதரவு கோட்டைகளை உடைத்துவிடுமா, அல்லது கூட்டணி அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக இணைந்துவிடுமா என்பது வரும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்… இருப்பினும், தற்போதைய நிலையில் டெல்லியின் அரசியல் கணக்கில் விஜய் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.



