நகைக்கடைக்கு சென்று தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கும்போது, அவற்றை ஒரு இளஞ்சிவப்பு (Pink) நிற காகிதத்தில் வைத்து மடித்துத் தருவதை நாம் பார்த்திருப்போம். இன்றைய நவீன கார்ப்பரேட் கடைகளில் ஆடம்பரமான பெட்டிகள் புழக்கத்திற்கு வந்தாலும், பாரம்பரியமான பல கடைகளில் இன்றும் இந்த பிங்க் பேப்பர் கலாச்சாரம் தொடர்கிறது. இதற்குப் பின்னால் வெறும் சென்டிமென்ட் மட்டுமல்ல, வியக்க வைக்கும் வணிகத் தந்திரமும், அறிவியல் காரணமும் ஒளிந்திருப்பதாக தெரிவிக்கிறார் நகை வியாபாரி அல்தாஃப்.
இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல தசாப்தங்களாகப் புழக்கத்தில் இருக்கும் இந்த வழக்கம், ஒரு பொருளின் மதிப்பை உயர்த்தித் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, வெள்ளி நகைகளை இந்த இளஞ்சிவப்பு காகிதத்தில் வைக்கும்போது, அந்த நிறத்தின் பின்னணிக்கும் வெள்ளியின் பிரகாசத்திற்கும் இடையே ஒரு தனித்துவமான முரண் ஏற்படுகிறது. இது நகையை வாடிக்கையாளரின் கண்களுக்கு இன்னும் கூடுதல் கவர்ச்சியாகவும், பளபளப்பாகவும் காட்ட உதவுகிறது. எளிமையாகச் சொன்னால், சாதாரண நகையைக் கூட ஒரு ‘ஸ்பெஷல்’ பொருளாகக் காட்டும் வித்தை இந்த நிறத்தில் உள்ளது.
அறிவியல் ரீதியாக பார்த்தால், நாம் வாங்கும் 22 காரட் தங்க நகைகளில் உறுதித்தன்மைக்காக செம்பு அல்லது வெள்ளி கலக்கப்பட்டிருக்கும். இவை காற்றில் உள்ள ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிந்து, காலப்போக்கில் நகையை கருமையடைய செய்யும். ஆனால், இந்த இளஞ்சிவப்பு காகிதங்களில் ஒரு சிறப்பு பூச்சு இருக்கும். இது ஈரப்பதம் மற்றும் காற்றின் பாதிப்பில் இருந்து நகையை பாதுகாப்பதோடு, மனிதர்களின் வியர்வை மற்றும் வெப்பம் நகையின் பொலிவை குறைக்காமல் தடுக்கிறது.
தங்கம் ஒரு மென்மையான உலோகம் என்பதால், மற்ற பொருட்களுடன் உரசும்போது அதில் எளிதில் கீறல்கள் விழ வாய்ப்புண்டு. பிங்க் நிற டிஷ்யூ பேப்பர்கள் மிகவும் மென்மையாக இருப்பதால், நகைகளில் கீறல்கள் விழுவதைத் தடுப்பதோடு, அதில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் உதிர்ந்து விடாமலும் பாதுகாக்கின்றன. தங்கம் துருப்பிடிக்காது என்றாலும், அதன் பொலிவு மங்காமல் நீண்ட காலம் புதியது போலவே இருப்பதற்கு இந்த எளிய காகித மடிப்பு ஒரு சிறந்த கவசமாக செயல்படுகிறது.
Read More : பெண்களே..!! ரூ.5,000 உரிமைத்தொகை இன்னும் வரவில்லையா..? உடனே இதை பண்ணுங்க..!! வெளியான அறிவிப்பு..!!



