சன் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற தொடரான ‘எதிர்நீச்சல்’, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே செல்லும் நிலையில், தற்போது அந்த சீரியலைச் சுற்றி புதிய விவாதங்கள் எழுந்துள்ளது. வெற்றிகரமாக நிறைவடைந்த முதல் சீசனுக்குப் பிறகு, தற்போது ஒளிபரப்பாகி வரும் 2-வது சீசனும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சூழலில் தான், இந்த சீரியலில் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ‘ஈஸ்வரி’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனிகா, திடீரென சீரியலில் இருந்து விலகி ரசிகர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தன்னுடைய சிறந்த நடிப்புத் திறனால் பல்வேறு மொழித் திரைப்படங்களில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார் கனிகா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
‘ஃபைவ் ஸ்டார்’ (2002) திரைப்படம் மூலம் கனிகாவின் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். எஸ். ஜே. சூர்யாவின் தயாரிப்பில், இப்படம் உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் வெளியான ‘வரலாறு’ உள்ளிட்ட முக்கியமான படங்களில் கனிகா நடித்திருந்தார்.
நடிப்பு மட்டுமின்றி, டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார். குறிப்பாக, இயக்குநர் ஷங்கரின் ‘சிவாஜி’ திரைப்படத்தில், ஸ்ரேயாவுக்கு டப்பிங் பேசியவர் கனிகா தான். அத்துடன், சில திரைப்படங்களில் பாடல்கள் பாடியும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ‘எதிர்நீச்சல்’ சீரியலில், ஆதி குணசேகரனின் மனைவியாக, ஈஸ்வரி கதாபாத்திரத்தில் கனிகா நடித்து வந்தார். இவர், தற்போது தனிப்பட்ட காரணங்களால் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் தான், அவரை மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற காட்சிகள், சீரியலில் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால், குணசேகரன் கதாபாத்திரத்திற்கு இருந்த முக்கியத்துவம், தனக்கு இல்லை என்ற வருத்தத்திலும் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க கனிகா, ஒரு நாளைக்கு ரூ.12,000 சம்பளம் வாங்கியுள்ளார். எனவே, சம்பளம் குறைவு என்ற காரணத்தால் கூட அவர் விலகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், கனிகாவின் ஈஸ்வரி கதாபாத்திரத்திற்கு, வேறு ஒரு நடிகை வருவாரா..? அல்லது அந்தக் கதாபாத்திரம் இதோடு முடித்து வைக்கப்படுமா..? என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.