கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.
சம்பவ இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பலர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் வழியிலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு முதலமைச்சர் கரூர் சென்று காயமடைந்தவர்களை ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே ஆதவ் அர்ஜுனா சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் அறிவழகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், “உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே நாளில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வளவு குறுகிய நேரத்தில் மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்?
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்ற விதி இருக்கும்போது, ஏன் அவசர அவசரமாக ஆய்வு செய்யப்பட்டது? மருத்துவர்கள் தகுதியானவர்களா?” என வழங்கறிஞர் கேள்வி எழுப்பினார். மேலும், “விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக கூறுவது பொய்” எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இந்த கூட்ட நெரிசலுக்கு பின்னே சதித்திட்டம் உள்ளது. எனவே, இந்த வழக்கை மாநில அரசு விசாரிக்கக் கூடாது, சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். இதனை தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது” என தெரிவித்தார்.
Read more: தினமும் ரூ.45 முதலீடு செய்தால் ரூ.25 லட்சம் கிடைக்கும்.. சூப்பரான இந்த LIC பாலிசி பற்றி தெரியுமா..?