இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சாதாரண கண்டக்டராக இருந்து இன்று ஆசியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினி, ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது. அவரது புகழ் எவ்வளவு உயர்ந்திருந்தாலும், ரஜினி எப்போதும் தன்னுடைய எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்.
புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் “நான் இன்னும் ஒரு சாதாரண மனிதன் தான்” என்ற மனநிலையுடன் வாழ்கிறார். அதுவே இவரை இன்று வரை மக்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாட வைக்கும் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பெருமையாக கூறுகின்றனர். இவர் லதா என்பவரை காதலித்து திருப்பதியில் வைத்து திருமணம் செய்துகொண்டார். புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிகாந்த் திருமணத்த்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
மூத்த பத்திரிகையாளர் கண்ணதாசன் இதுதொடர்பாக பேசுகையில், “தன்னுடைய திருமணத்துக்கு பத்திரிக்கையாளர்கள் வரக்கூடாது என்று ரஜினி கூறிவிட்டார். ஆனாலும் எங்களது அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் போக சொன்னதால் நாங்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டோம்.
நாங்கள் வந்தது ரஜினி சார்க்கு தெரிந்துவிட்டது. எங்களை நோக்கி யாரும் ஃபோட்டோ எடுக்காதீங்க என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டே வந்தார் ரஜினி. அந்த நேரம் பார்த்து ரஜினியின் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் ப்ரைவேட் ஃபோட்டோகிராஃபரை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். வந்தவர் ரஜினிக்கு ஆளுயர மாலையை போட்டார். அப்போது அந்த ஃபோட்டோகிராஃபர் ஃபோட்டோ எடுத்துவிட்டார்.
ஃபோட்டோ எடுத்தவர் பத்திரிகையாளர் என்று ரஜினிகாந்த் தவறாக நினைத்துக்கொண்டு, ‘ஏய் ஏன் ஃபோட்டோ எடுத்த தொலைச்சிடுவேன் ராஸ்கல்’ என்று டென்ஷனோடு அந்த மாலையை தூக்கி வீசினார். இதனால் திருமணத்தில் சலசலப்பே நடந்துவிட்டது” என்றார்.



