அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள மோதல், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சிக்கலான அதிகார சமநிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கும் வலுவான அரசியல், ராணுவ மற்றும் தூதரக ஆதரவை Israel பெற்றுவரும் நிலையில், ஈரான் பல நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. முக்கியமான அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள்கூட தெஹ்ரானுக்கு வெளிப்படையாக ஆதரவு தருவதில்லை. இதன் பின்னணியில் ஆழமான புவியியல் அரசியல் காரணங்கள் உள்ளன.
மத்திய கிழக்கு நாடுகள் பலவும் “மத ஒற்றுமையை” விட, “தேசிய பாதுகாப்பு”, ஆட்சித் திடத்தன்மை மற்றும் பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. பல அரபு நாடுகள், ஈரானை முஸ்லிம் ஒற்றுமைக்கான கூட்டாளியாக இல்லை. மாறாக தங்கள் பிராந்திய செல்வாக்கை விரிவுபடுத்த விரும்பும் போட்டியாளராகவே பார்க்கின்றன.
ஏன் அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானை ஆதரித்து ஒன்றிணைவதில்லை என்பதற்கான ஐந்து முக்கிய காரணங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
மதப் பிரிவு மற்றும் இன வேறுபாடுகள்
இந்தப் பிளவின் முக்கிய காரணங்களில் ஒன்று மத மற்றும் மூலோபாய போட்டியாகும். ஈரான் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் அடங்கிய நாடாகும். அங்கு ஷியா அரசியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மதகுரு ஆட்சி நிலவுகிறது. இதற்கு மாறாக, பெரும்பாலான அரபு நாடுகள் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்டவை. இந்த மத வேறுபாடு மட்டுமல்ல, பல தசாப்தங்களாக உருவான நம்பிக்கையின்மையும் இதற்கு காரணமாக உள்ளது. மேலும், ஈரான் அரபு நாடல்ல; அது பாரசீக இனத்தைச் சேர்ந்தது. இதுவும் வரலாற்று மற்றும் இன அடிப்படையிலான போட்டியை அதிகரிக்கிறது.
பிராந்திய அச்சுறுத்தலாக ஈரானின் நோக்கம்
ஈரான், சிரியா, லெபனான், குவைத், ஈராக் போன்ற நாடுகளில் சில கூட்டாளிகளை பெற்றிருந்தாலும், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பொதுவாக ஈரானை ஆதரிப்பதில்லை. சிரியா, ஏமன், ஈராக் போன்ற நாடுகளில் ஈரான் தலையீடு செய்கிறது என்று குற்றம்சாட்டி, அதனை மத்திய கிழக்கு நிலைதடுமாற்றத்திற்கு காரணமாக பல அரபு நாடுகள் கருதுகின்றன. மேலும், ஹிஸ்புல்ல, ஹமாஸ் போன்ற அமைப்புகளுடன் ஈரானின் நெருங்கிய உறவு, பிரதிநிதிப் போர்கள் மற்றும் உள்நாட்டு கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தை அண்டை நாடுகளில் உருவாக்குகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் உள்ள கூட்டணி
மூலோபாய கூட்டணிகளும் இந்த நிலையை மேலும் சிக்கலாக்குகின்றன. எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் போன்ற பல அரபு நாடுகள், இஸ்ரேலுடன் நடைமுறை சார்ந்த தூதரக அல்லது பாதுகாப்பு உறவுகளை வைத்துள்ளன. இவை பெரும்பாலும் அமெரிக்காவின் நலன்களுடன் இணைந்தவை. எனவே, இந்த நாடுகள் பான்-இஸ்லாமிய ஒற்றுமையை விட, தங்கள் தேசிய பாதுகாப்பையே முன்னிலைப்படுத்துகின்றன.
பொருளாதார மற்றும் புவியியல் அரசியல் காரணங்கள்
2020 செப்டம்பர் 15 அன்று கையெழுத்தான அப்ரகாம் ஒப்பந்தம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள், பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுடன் நேரடி மோதலைவிட, பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை முன்னுரிமை அளித்தன. இது, இஸ்ரேலின் சட்டபூர்வத்தை ஏற்க மறுக்கும் ஈரானின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறானது.
“அச்சு” பிரச்சனை
ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற பிரதிநிதி அமைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு சவால் விடுகிறது என்பதில் பல அரபு அரசுகள் அச்சம் அல்லது எதிர்ப்பை கொண்டுள்ளன. பல அரபு தலைவர்கள் பொதுவாக பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதனால் ஈரானின் பரந்த பிராந்திய அரசியல் திட்டத்திற்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதல்ல.
எனவே, மத ஒற்றுமை இருந்தாலும், தேசிய நலன், பாதுகாப்பு கவலைகள் மற்றும் பிராந்திய போட்டிகள் காரணமாக, அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானை ஆதரித்து ஒன்றிணைவதில்லை என்பதே இந்த நிலைமையின் முக்கிய காரணமாக உள்ளது.



