புரட்டாசி மாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். இது பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் சனிக்கிழமை விரதம், மகாளய பட்சம், மகாளய அமாவாசை மற்றும் நவராத்திரி போன்ற முக்கியமான விஷேச நாட்கள் வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதை நமது முன்னோர்கள் தவிர்த்துள்ளனர்.
எப்போது சுப காரியங்கள் செய்யலாம்..?
ஜோதிட சாஸ்திரங்களின்படி, சித்திரை, வைகாசி, ஆவணி, தை மற்றும் பங்குனி மாதங்கள் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த மாதங்களாகும். இந்த மாதங்களில் சுப காரியங்கள் செய்வதால் மணமக்கள் மகிழ்ச்சியாகவும், புத்திர பாக்கியத்துடனும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
மறுபுறம் ஆடி, புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்யக்கூடாது. ஆனால், வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் எந்த சுப காரியங்களையும் செய்யலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த மாதம் ஒற்றைப்படை மாதமாக இருந்தால், வளைகாப்பு நடத்துவதில் எந்த தடையும் இல்லை.
வீடு கட்டுதல் மற்றும் கிரகப்பிரவேசம் :
வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய 4 மாதங்களில் வாஸ்து நாள் குறிப்பிடப்படுவதில்லை. எனவே, இந்த மாதங்களில் கிரகப்பிரவேசம் அல்லது வாஸ்து பூஜை செய்யக் கூடாது. வாடகை வீட்டிற்கு மாறுவதாக இருந்தாலும், இந்த மாதங்களில் குடிபோகக்கூடாது. இருப்பினும், வீடு கட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தால், இந்த மாதத்தில் பணிகளைத் தொடர்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
புரட்டாசி மாதம் இறைவழிபாட்டிற்கு மட்டுமல்ல, முன்னோர்களை வழிபடுவதற்கும் மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் மகாளய பட்சம் மற்றும் மகாளய அமாவாசை ஆகியவை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகவும் முக்கியமான நாட்களாகும். இந்த மாதம் முழுவதும் இறைவழிபாடு மற்றும் முன்னோர்கள் வழிபாட்டில் கவனம் செலுத்தப்படுவதால், சுப காரியங்களை தவிர்ப்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது.
Read More : பெருமாள் குடத்துடன் காட்சி தரும் அபூர்வ தலம்.. அப்பக்குடத்தான் கோவிலின் சுவாரஸ்ய வரலாறு இதோ..!!