வைகுண்ட ஏகாதசி என்பது வெறும் விரத நாள் மட்டுமல்ல, அது ஆன்மீக ரீதியாக நம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் ஒரு புண்ணிய காலமாகும். மார்கழி மாதத்தில் வரும் இந்த மங்கலகரமான நாளில், விரதமிருக்கும் பக்தர்கள் சில முக்கியமான சாஸ்திர விதிகளை கடைபிடிப்பது அவசியம் என்று ஆன்மீக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த நாளில் நாம் செய்யும் சில சாதாரண காரியங்கள் கூட விரதத்தின் முழுப் பலனையும் தடுத்துவிடும் என்பதால், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
ஏகாதசி அன்று கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விதிகளில் ஒன்று, துளசி இலைகளை பறிக்காமல் இருப்பது. மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிரியமான துளசி தேவி, ஏகாதசி நாளில் விஷ்ணுவுடன் ஐக்கியமாகி தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, வழிபாட்டிற்கு தேவையான துளசியை முதல் நாளே (தசமி அன்று) பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று துளசியை பறிப்பது அந்த அன்னையின் தியானத்தை கலைப்பதாக கருதப்படுவதால், இதனை தவிர்க்க வேண்டும்.
அதேபோல், இன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் கோயில் பிரசாதத்தை கூட உண்ணக்கூடாது என்ற ஒரு விதி உள்ளது. ‘உண்ணா நோன்பு’ என்பது முழுமையான பட்டினியை குறிப்பதால், தீர்த்தம் அல்லது துளசியை தவிர மற்ற பிரசாதங்களை விரதம் முடிந்த பிறகு துவாதசி அன்று ஏற்றுக்கொள்வதே சிறந்தது.
ஆன்மீக ரீதியாக ஏகாதசிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் மற்றொரு செய்தி, திதி அல்லது சிரார்த்தம் தொடர்பானது. பொதுவாக தாய் அல்லது தந்தைக்குரிய திதி ஏகாதசி நாளில் வந்தால், சாஸ்திரப்படி அன்றைய தினமே அதைக் கொடுக்காமல், அடுத்த நாளான ‘துவாதசி’ அன்று கொடுப்பதே முறையாகும். ஏகாதசி என்பது முக்திக்குரிய நாள் என்பதால், அன்றைய தினம் பித்ரு காரியங்களை செய்வதை தவிர்த்து, மறுநாள் தான தர்மங்களுடன் திதி கொடுப்பது பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கை.
மேலும், ஏகாதசி விரதத்தின் போது அரிசி உணவை தவிர்ப்பது மிகவும் முக்கியம். புராண கதைகளின்படி, ஏகாதசி அன்று அரக்கன் ஒருவன் அரிசியில் தஞ்சமடைவதாக கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், சந்திரன் மற்றும் புவியீர்ப்பு விசையினால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க, எளிதில் செரிமானமாகாத அரிசி உணவை தவிர்த்து பட்டினி இருப்பது குடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை தரும். இத்தகைய ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்களுக்காகவே, வைகுண்ட ஏகாதசி அன்று சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டு, பெருமாளின் அருளைப் பெற முன்னோர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : உலகச் சந்தையில் திடீர் மாற்றம்..!! ரூ.17,000 வரை குறைந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!!



