மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் புதன்கிழமை அன்று விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவார் புதன்கிழமை காலை 8 மணியளவில் பாராமதிக்கு அருகிலுள்ள சில கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக மும்பையிலிருந்து விமானத்தில் புறப்பட்டார். இருப்பினும், பாராமதி விமான நிலையத்தை நெருங்கியபோது, அவரது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும், அவருடன் விமானத்தில் பயணித்த அவரது மெய்க்காப்பாளர் விதீப் ஜாதவ், விமானி சுமித் கபூர், துணை விமானி ஷாம்பவி பதக் மற்றும் விமானப் பணிப்பெண் பிங்கி மாலி ஆகியோரும் உயிரிழந்தனர். அஜித் பவாரின் திடீர் மரணம் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையும் உலுக்கியது.
நேற்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணியளவில், பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் வளாகத்தில் அஜித் பவாரின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. பவார் குடும்பத்தினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், அரசியல்வாதிகள், சில பிரபலங்கள், பாராமதி மக்கள், மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த தாதாவின் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட ஒரு பெரிய கூட்டம் அங்கு கூடியிருந்தது. அவரின் ஆதரவாளர்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்..
அஜித் தாதாவின் விமானத்தின் விமானி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டாரா?
விமான விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது, அதன் பரிசோதனையின் மூலம் விமான விபத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த வழக்கில் ஒரு புதிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் சுமித் கபூரின் நண்பர் ஒருவர் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளதுடன், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
அஜித் பவார் பயணித்த விமானத்தை வேறு ஒரு விமானி இயக்கவிருந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.. பாராமதி விமானப் பயணத்திற்காக நிறுவனம் மற்றொரு விமானியைத் தேர்ந்தெடுத்திருந்தது. இருப்பினும், புதன்கிழமை அன்று, அந்த விமானி போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமானத்திற்குத் தாமதமாக வந்துள்ளார். ஆனால், அஜித் பவார் பாராமதிக்குச் செல்வதற்குத் தாமதமாகிவிடும் என்பதால், விமான நிறுவனம் இந்த பொறுப்பை கேப்டன் சுமித் கபூரிடம் ஒப்படைத்தது. அதன் பிறகு, துணை விமானி ஷாம்பவி பதக்கும் அவருடன் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.
கேப்டன் சுமித் கபூர் ஒரு சாதாரண விமானி அல்ல, அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு 15,000க்கும் மேற்பட்ட மணிநேர விமான அனுபவம் இருந்தது. கேப்டன் சுமித்தின் நண்பர் ஜி.எஸ். குரோவர் இதுகுறித்து பேசிய போது “ அவர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர், அவர் எந்தத் தவறும் செய்ய வாய்ப்பு மிகக் குறைவு. சுமித் சில நாட்களுக்கு முன்பு ஹாங்காங்கில் இருந்து திரும்பியிருந்தார். பரமதிக்கு இந்த விமானத்தில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவருக்கு விமானம் குறித்த தகவல் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.
அஜித் பவாரின் விமான விபத்து குறித்து சிஐடி விசாரணை
முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் விமான விபத்து குறித்து சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. மாநில அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநில குற்றப் புலனாய்வுத் துறை இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஒரு ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்படும், விபத்து குறித்த விவரங்கள் முழுமையாக விசாரிக்கப்படும். விபத்து ஏன் நடந்தது, எப்படி நடந்தது, அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
Read More : மத்திய பட்ஜெட் 2026 : ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகைகள் அறிவிக்கப்படுமா?



