ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 79-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான பொன்னாள் ஆகும்.. இந்த நாள், சுதந்திரத்தின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆங்கிலேயர் ஆட்சி :
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் சுமார் 200 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தது… 1757 ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பிறகு கம்பெனி ஆட்சியின் மூலம் படிப்படியாக விரிவடைந்தது. 1858 ஆம் ஆண்டு முதல், பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடி ஆட்சியின் கீழ், “பிரிட்டிஷ் ராஜ்” என்று அறியப்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனி:
17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனி வணிகத்திற்காக இந்தியாவுக்கு வந்தது. காலப்போக்கில், அது அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக மாறியது.
பிளாசிப் போர்:
1757 ஆம் ஆண்டு நடந்த பிளாசிப் போர் கம்பெனி ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தது. இந்தப் போரில் ஆங்கிலேயர்கள் வங்காள நவாப்பை தோற்கடித்து, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.
நிறுவன ஆட்சி:
1765 ஆம் ஆண்டு முதல் கம்பெனி வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா மாகாணங்களில் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது. இது அவர்களின் ஆட்சி மேலும் வலுப்பெற உதவியது.
பிரிட்டிஷ் ராஜ்
1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சிக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, இந்தியாவை நேரடியாக ஆட்சி செய்யத் தொடங்கியது. இதுவே பிரிட்டிஷ் ராஜ் என்று அழைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ராஜ் இந்தியாவில் ஒரு பெரிய நிர்வாக கட்டமைப்பை நிறுவியது. அதில் இந்திய குடிமைப் பணி, இந்திய இராணுவம் மற்றும் நீதித்துறை ஆகியவை அடங்கும். ஆங்கிலேயர் ஆட்சியில் ரயில்வே, அஞ்சல் துறை, தொலைத்தொடர்பு போன்ற நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கல்வி மற்றும் சட்ட அமைப்புகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
தீமைகள்:
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ், இந்தியா ஒரு காலனியாக மாற்றப்பட்டது. இந்திய வளங்கள் சுரண்டப்பட்டன. பஞ்சம், வறுமை போன்ற சமூகப் பிரச்சனைகள் அதிகரித்தன.
சுதந்திரப் போராட்டம்:
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ், சுதந்திரத்திற்கான போராட்டம் தீவிரமடைந்தது. மகாத்மா காந்தியின் தலைமையில், இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அகிம்சை வழியில் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் இந்தியா 1947 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு சுதந்திர நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று நள்ளிரவில் முறையாக சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, பிரதமர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். சுதந்திர தின நாளில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கலாச்சார நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் மற்றும் தேசபக்தி பாடல்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.